Published : 07 Jan 2021 02:08 PM
Last Updated : 07 Jan 2021 02:08 PM
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கொலை வழக்குகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாகவே இருக்கும் வழக்குகள் எத்தனை என, ஜனவரி 25-ம் தேதி அறிக்கை அளிக்கும்படி, சென்னை மாநகரக் காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் துரைராஜ் என்பவர் சார்பில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, மாநிலக் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகியிருந்தார்.
அவரிடம் நீதிபதி பாரதிதாசன், “சென்னை நகரில் என்ன நடக்கிறது, கொலை வழக்குகள் 15, 16 ஆண்டுகள் நிலுவையில் உள்ளன. இத்தனை ஆண்டுகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக் கைதிகளாக உள்ளனர்.
புதிய வழக்குகளில் கூட சாட்சிகள் பல்டி அடித்துவிடும் நிலையில், 15 ஆண்டுகள் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தால், சாட்சி சொல்ல யார் வருவார்கள். தலைமறைவாகி விடுவார்கள். பிறகு குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை பெற்றுக் கொடுக்கப் போகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கொலை வழக்குகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாகவே இருக்கும் வழக்குகள் எத்தனை என, ஜனவரி 25-ம் தேதி அறிக்கை அளிக்கும்படி, சென்னை மாநகரக் காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அந்த அறிக்கையைப் பார்த்தபின் ஆணையரை அழைத்து விளக்கம் கேட்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம், பவாரியா கொள்ளைக் கும்பலால் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்றும், மீதமுள்ளவர்களுக்கு எதிரான வழக்கை முடிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT