Published : 19 Oct 2015 04:29 PM
Last Updated : 19 Oct 2015 04:29 PM
இடுக்கி தேயிலை தோட்டங்களில் கூலி உயர்வு எதிரொலியாக, தேனி மாவட்ட பெண் தொழிலாளர்கள் கேரளத்துக்குச் செல்ல அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் அறுவடை பாதிக் கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தஞ்சை மாவட் டத்துக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டம், கம்பம் பள்ளத் தாக்கு பகுதியில் 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு, மாவட்டத்தில் போதிய மழையில்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமானோர் அண்டை மாவட்டமான இடுக்கி யில் தேயிலை, ஏலம், காபி தோட்டங்களுக்கும், உள்ளூரில் நூறு நாள் வேலைத் திட்டத்துக்கும் செல்லத் தொடங்கினர். இதனால் சாகுபடி பணிக்கு பெண் தொழி லாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனையடுத்து, விவசாயி கள் சிலர் நடவு மற்றும் அறுவடைக்கு இயந்திரங்களை பயன்படுத்தி வந்தனர். ஆனாலும், தொழிலாளர்கள் இல்லாமல் விவசாயப் பணிகள் பாதிக்கப் பட்டன.
இதற்கிடையில், கேரளத்தில் கூலிப் பிரச்சினை காரணமாக போராட்டங்கள் நடைபெற்று வந்ததால், வேலையை இழந்து தவித்த தோட்டத் தொழிலாளர்கள் பலர் மீண்டும் விவசாயப் பணிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், கேரளத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 60 வரை கூலி உயர்வு அளிக்கப்பட்டதால், தற்போது தொழிலாளர்கள் கேரள தோட்ட வேலைக்கு செல்ல அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் உத்தமபாளையம் விவசாயி ராமசாமி கூறுகையில், நெல் நடவு, அறுவடை, அறுவடை செய்யப்பட்ட நெல் கதிர்களை தலை சுமையாக தூக்கிக் கொண்டு களத்து மேட்டுக்குக் கொண்டு வருதல், கதிரடித்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை பெண் தொழிலாளர்கள் செய்கின்றனர். கேரளத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதால் முன்பு வேலை செய்த தொழிலாளர்களும், புதிதாக வேலைக்கு வந்த பெண் தொழிலாளர்களும் கேரளத்துக்குச் செல்லத் தொடங்கி விட்டனர். இதனால் உள்ளூரில் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் அறுவடைப் பணி தொடங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் 10, 15 ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்து வருகின்றனர். ஆனால், ஒரு குழி, 2 குழி (ஒரு குழி 60 செண்ட்) சாகுபடி செய்துள்ள சிறு விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT