Published : 07 Jan 2021 12:46 PM
Last Updated : 07 Jan 2021 12:46 PM
திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, அராஜகம் அதிகரிக்கும் என, ஈரோட்டில் முதல்வர் பழனிசாமி பேசினார்.
ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் நாளாக இன்று (ஜன. 07) பிரச்சாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி, வீரப்பன்சத்திரம் பகுதியில் பேசியதாவது:
"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. மாநிலம் வளர்ச்சியடைய சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும்.
நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. மழைநீர் சேகரிக்கப்பட்டுள்ளது. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் மக்கள் அரசாக இந்த அரசு விளங்குகிறது.
திமுக அராஜக கட்சி, அந்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து அதிகரித்து விடும். கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்.
ஓட்டலில் சாப்பிட்ட பில்லுக்கு திமுகவினர் பணம் தர மாட்டார்கள். அதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் அந்த ஓட்டலுக்குச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்வார். எனவே, கட்டப்பஞ்சாயத்து செய்யும் கட்சி தேவையா?
தமிழகத்தில் சாதிச்சாண்டை, மதச்சண்டை, அரசியல் அடாவடி கிடையாது. அமைதியான இந்த தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் அமைதியாக வாழ முடியாது. கடைக்காரர்கள் நிம்மதியாக வாழ முடியாது. மக்களுக்குத் தேவையான திட்டங்களை நாங்கள் கொடுத்து வருகிறோம்.
ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் இன்னும் 10 நாட்களில் முடிவடைந்து, காவிரிக் குடிநீர் வழக்கப்படும். ஈரோடு சி.என்.கல்லூரியில் இருந்து சித்தோடு வரை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும்.
கைத்தறி நெசவாளர்களுக்கான தள்ளுபடி ரூ.300 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மானிய விலையில் நெசவாளர்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில், மின்வெட்டு இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டதோடு, தமிழகம் உபரி மின்சாரம் தயாரிக்கும் மாநிலமாக மாறியுள்ளது".
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT