Published : 07 Jan 2021 12:45 PM
Last Updated : 07 Jan 2021 12:45 PM
வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்து, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நெற்பயிரில் பழநோய் பாதிப்பு ஏற்பட உள்ளது.
இதைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறைத் தலைவர் கா.கார்த்திகேயன், விவசாயிகளுக்கு ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
''நெல் பழ நோயானது, அஸ்டிலாஜீனாய்டியா என்ற பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. சாதாரணமாக நெற்கதிர்களின் ஒருசில நெல் மணிகளில் இது தென்படும். பாதிக்கப்பட்ட நெல்மணிகள் நிறம் மாறி, பந்து போல் 1 செ.மீ. சுற்றளவுக்கு வளரும். நெல் மணிகள் முதிர்ச்சியடையும்போது, மஞ்சள் நிறமானது கரும்பச்சை நிறமாக மாறிவிடும். இந்நோய் வேகமாகப் பரவி, நெற்பயிரில் கணிசமாக மகசூல் இழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
அஸ்டிலாஜீனாய்டியா பூஞ்சாணமானது, பூக்கும் பருவத்தில் உள்ள நெற்பயிர்களையே வெகுவாகத் தாக்கும். அதிக மழை, காற்றில் ஈரப்பதம் போன்றவை இந்நோய் பரவச் சாதகமாகின்றன. மண்ணில் அதிகமாகக் காணப்படும் தழைச்சத்து மற்றும் காற்றால், இந்நோய் அருகில் உள்ள வயல்களிலும் பரவும் தன்மைக் கொண்டது. பின்பருவப் பயிர்களில் இந்நோய் பாதிப்பு அதிகமாகத் தென்படும்.
கட்டுப்பாட்டு முறைகள்
பாதிக்கப்பட்ட நெல்மணிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவற்றை அப்புறப்படுத்தி அழித்துவிட வேண்டும். இல்லையென்றால் அருகில் உள்ள பயிர்கள் மற்றும் வயல்களில் பரவும். தழைச்சத்தைப் பிரித்து இடைவெளியில் இட வேண்டும்.
நெல் புடைப்புப் பருவத்தில் இருக்கும் போது ஒரு முறையும், 50 சதவீதம் பூக்கும் தருணத்தில் இருக்கும்போதும், பிராப்பிகனாசோல் மருந்தை 500 மி.லி. அளவிலோ அல்லது காப்பர் ஹைட்ராக்ஸைடை 1.25 கிலோ வீதம் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் பயன்படுத்த வேண்டும். விதைப்பின் போது, நெல் விதைகளை கார்பன்டசிம் என்ற பூஞ்சாணக் கொல்லியைப் பயன்படுத்தி, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
அதிக பாதிப்பு தென்படும் இடங்களில் முன்பருவ நடவு செய்ய வேண்டும். பயிர்கள் ஈரமாக இருக்கும்போது உரமிடுதல், களையெடுத்தல் போன்றவற்றைச் செய்யக்கூடாது.
அறுடைக்கு முன் பழநோய் பாதிக்கப்பட்ட நெல்மணிகளைப் பிரித்து அழிப்பதன் மூலம், அடுத்த பருவத்தில், மீண்டும் நெற்பயிரில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். எனவே, விவசாயிகள் இம்முறைகளைப் பின்பற்றி நெல் பழநோயைக் கட்டுப்படுத்தி, மகசூல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்''.
இவ்வாறு கா.கார்த்திகேயன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT