Published : 07 Jan 2021 03:15 AM
Last Updated : 07 Jan 2021 03:15 AM

கனமழையால் சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கியது: மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி தீவிரம்

சென்னை

சென்னையில் பெய்த மிக கனமழை காரணமாக பல்வேறு சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அவற்றை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை தொடர்ந்து மழை பெய்தது. அதன் காரணமாக கிண்டி, சைதாப்பேட்டை, ராயப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சாந்தோம், வியாசர்பாடி, கே.கே.நகர் ராஜமன்னார் சாலை மற்றும் புறநகர் பகுதிகளான பள்ளிக்கரணை, வரதராஜபுரம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

சென்னையில் அதிகபட்சமாக கிண்டியில் 16 செமீ, மாம்பலத்தில் 15 செமீ, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் தலா 14 செமீ, அயனாவரத்தில் 13 செமீ, தரமணி, பெரம்பூரில் 12 செமீ, ஆலந்தூர், அம்பத்தூர், தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில் தலா 11 செமீ, புரசைவாக்கத்தில் 10 செமீ, எழும்பூரில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. புறநகர் பகுதிகளான கேளம்பாக்கத்தில் 21 செமீ, தாம்பரத்தில் 16 செமீ, செம்பரம்பாக்கம், கொரட்டூர், பூந்தமல்லி ஆகிய இடங்களில் தலா 13 செமீ, சென்னை விமான நிலையத்தில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலையே மழை நின்றுவிட்ட போதிலும் நேற்று பள்ளிக்கரணை, கே.கே.நகர், தண்டையார்பேட்டை, புறநகர் பகுதிகளான தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியவில்லை. அப்பகுதிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் பெய்த மிக கனமழை காரணமாக 36 இடங்களில் மழைநீர் தேங்கியது. பகல் 12 மணி நிலவரப்படி 13 இடங்களில் தேங்கிய நீர் முற்றிலும் வடிய வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 23 இடங்களில் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து இடங்களிலும் மழைநீர் வெளியேற்றப்பட்டுவிடும். மழை காரணமாக 5 இடங்களில் விழுந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:

சென்னையில் ஜனவரி மாதத்தில் 105 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளது. சென்னையில் ஜனவரி மாதத்தில் கடந்த 1915-ம் ஆண்டு அதிகபட்சமாக ஒரே நாளில் (15-ம் தேதி) 21 செமீ மழை பதிவாகி இருந்தது. அந்த மாதத்தில் மொத்தம் 24 செமீ மழை பதிவானது. அதன் பிறகு இந்த ஆண்டு 5-ம் தேதி ஒரே நாளில் கிண்டியில் 16 செமீ மழை பதிவாகியுள்ளது. இந்த மாதத்தில் இதுவரை 16 செமீ மழை பதிவாகியுள்ளது. அதனால் கடந்த 1915-ம் ஆண்டு ஜனவரியில் பெய்த மழை அளவும், அம்மாதத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக பெய்த மழை அளவு ஆகியவை இன்றுவரை, சென்னையில் ஜனவரி மாதத்தில் பெய்த உச்சபட்ச மழை அளவாகவே கருதப்படுகிறது.கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7 செமீ மழையும், ஒரே நாளில் 3 செமீ மழை பதிவாகி இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x