Published : 07 Jan 2021 03:16 AM
Last Updated : 07 Jan 2021 03:16 AM

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பதால் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும்: அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை

கோப்புபடம்

திருச்சி

தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளிக்கும் முடிவு, கரோனா வைரஸ் பரவுவதை மீண்டும் அதிகரிக்கச் செய்யும் என்பதால், இதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து மார்ச் 24-ம் தேதி முதல் மூடப்பட்டிருந்த திரையரங்குகள், 50 சதவீத பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நவ.10-ம் தேதி முதல் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி திரையரங்குகளுக்கு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கு திரைத்துறையினர் வரவேற்பு தெரிவித்தாலும், அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து குடிமக்கள் மன்றத் தலைவர் எம்.சேகரன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: பிற நாடுகளில் கரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று பரவி வரும் நிலையில், அங்கிருந்து இந்தியாவுக்கு வந்த சிலருக்கு அதன் தாக்கம் உள்ளது. கரோனா வைரஸ் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தி, ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும் வரை திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது தான் சரியான நடைமுறையாக இருக்கும். எனவே, தமிழக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

இதுகுறித்து அவசர சிகிச்சை நிபுணர் ஏ.முகமது ஹக்கீம் கூறியது: மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் தொடர் உழைப்பால் கரோனா வைரஸ் பரவல் இப்போது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இந்திய மருத்துவ சங்கத்தின் அறிவிப்பின்படி கரோனாவால் ஏறத்தாழ 63 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், மருத்துவர்கள் மக்களுக்காக உழைத்து வருகின்றனர்.

அலட்சியப் போக்கால் சில மேலைநாடுகளில் தற்போது கரோனா பரவல் அதிகமாகி மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பது ஆபத்தானதாகும். ஒரு மூடிய அரங்குக்குள் 3 மணி நேரத்துக்கு நூற்றுக்கணக்கானோரை அடைத்து வைப்பது நோய் பரவலை எளிதாக்கி விடும். குளிர்சாதன வசதி இருந்தால், நோய் பரவுவது மேலும் பல மடங்கு அதிகரித்து, உயிர்சேதங்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x