Published : 06 Jan 2021 09:20 PM
Last Updated : 06 Jan 2021 09:20 PM
வேலூர் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.1.04 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர்.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஏலகிரி வளாகத்தில் உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு உள்ளாட்சி நிதித்துறை உதவி இயக்குநராகப் பரந்தாமன் (52) என்பவர் பணியாற்றி வருகிறார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் செலவினங்களைத் தணிக்கை செய்யும் பணிகள் இந்த அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி அலுவலர்களிடம் இருந்து உதவி இயக்குநர் உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் பெறுவதாக வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் பேரில், வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில், ஆய்வாளர் விஜய் உள்ளிட்ட போலீஸார் வேலூர் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு இன்று மாலை சென்றனர். அங்கு உதவி இயக்குநர் பரந்தாமன் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதில், உதவி இயக்குநர் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத பணம் 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து அங்குள்ள முக்கிய ஆவணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT