Published : 06 Jan 2021 07:55 PM
Last Updated : 06 Jan 2021 07:55 PM
செங்கம் அருகே வாய்விடாந்தாங்கல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சிக் காலத்தில் நீர் மேலாண்மை குறித்த இரண்டு கல்வெட்டுகள் புதிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை கண்டறியப்படாத புதிய கல்வெட்டுகளைக் கண்டெடுத்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன், முனைவர் சுதாகர், வரலாற்று ஆய்வாளர் பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக செங்கம் அடுத்துள்ள வாய்விடாந்தாங்கல் கிராமத்தில் எட்டி ஏரிக்கு அருகில் காளியம்மன் கோயில் மானிய நிலத்தில் ஒரு கல்வெட்டையும், அதே ஊரில் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள பெரிய பாறையில் மற்றொரு கல்வெட்டையும் புதிதாகக் கண்டெடுத்துள்ளனர். இந்த இரண்டு கல்வெட்டுகளும் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், விஜயநகர அரசர் குமார கம்பணன் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளையும் கல்வெட்டு அறிஞர் சு.ராஜகோபால் ஆய்வு செய்து படித்துள்ளார். அவர் அளித்த தகவலின்படி, ‘விஜயநகர அரசர் குமார கம்பணன் ஆட்சிக் காலத்தில் இவ்வூரில் கெங்கையாடி, அண்ணாமலை, வீரசிங்கதேவன், கூத்தாடும்பிச்சை, படுவூர் தோட்டி ஆகியோர் முடிவெடுத்து வெட்டும் பிள்ளை ஏந்தல் பாசனத்தில் உள்ள கழனிக்கு வாயலார் ஏந்தல் நீரைக் குறிப்பிட்ட அளவு நிறுத்தி நல்லன் செறு நிலத்திற்குப் பாய வேண்டும். அதற்கு மேல் வரும் நீரை வெளியேற்றிவிட வேண்டும்" என்று ஒரு கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
இது நீர் பாசனத்தை ஒழுங்குபடுத்தும் தகவலைக் கூறும் அரிய கல்வெட்டு ஆகும். மேலும், நீரைப் பயன்படுத்துவதற்கு உரிய வழிமுறைகளும் அதனை மேலாண்மை செய்வது குறித்த குறிப்புகளும் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன.
அதேபோல், சக ஆண்டு 1279 (பொது ஆண்டு 1357-ல்) வெட்டப்பட்ட மற்றொரு கல்வெட்டில் "ஜெயங்கொண்ட சோழமண்டலத்து ஆடையூர் நாட்டு கீழ்பற்றில் உள்ள படுவூரில் திருவண்ணாமலையில் உள்ள அணி அண்ணாமலை கோயில் திருப்பணிக்கு 100 குழி நிலம் இறையிலியாக (வரியில்லாத நிலம்) விடப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் அணி அண்ணாமலை பரையன் ஏந்தல் என்ற நீர்நிலையும் வெட்டுவித்து அந்த நிலத்தில் நத்தம் நிலத்தை ஏற்படுத்தி குடியும் ஏற்றி ஏரியும் வெட்டுவித்து கிணறும் ஆழப்படுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டின் மூலம் கூடுதல் தகவலாக தற்போது வாய்விடாந்தாங்கல் என்று அழைக்கப்படும் ஊரின் பெயர் வாயுளான் ஏந்தல் என்றும், அரசந்தாங்கல் என்று அழைக்கப்படும் ஊரின் பெயர் ஊர் அரசுரடையான் ஏந்தல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாறையில் உள்ள கல்வெட்டில் திருவண்ணாமலையைக் குறிக்க முக்கோணம் போன்ற குறியீடும் உள்ளது.
இதுபோன்ற குறியீடு உள்ள பல கல்வெட்டுகளை மாவட்ட ஆய்வு நடுவத்தால் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றது. புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளும் விஜயநகரக் காலத்தின் நீர் மேலாண்மைக்குச் சான்றாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment