Last Updated : 06 Jan, 2021 07:43 PM

1  

Published : 06 Jan 2021 07:43 PM
Last Updated : 06 Jan 2021 07:43 PM

பொங்கல் பரிசுத் தொகை; அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கருத்தால் அதிமுகவின் உண்மை நோக்கத்தை மக்கள் உணர வேண்டும்: கே.எஸ்.அழகிரி

சேலம்

முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதிலேயே பாஜக, பாமக உள்ளிட்ட அதிமுக கூட்டணியில் குழப்பம் நிலவுவதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, பெங்களூரு செல்லும் வழியில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''பொள்ளாச்சி சம்பவத்தில், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் மற்றும் உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பதாகத் திமுக, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் தொடக்கம் முதலே தெரிவித்து வந்தன. ஆனால், ஆளும்கட்சி இந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினரின் வலியுறுத்தல் காரணமாகவே சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. சிபிஐயும் சுதந்திரமாகச் செயல்படுகிறதா என்பது சந்தேகம்தான். இருந்தபோதும் இந்த வழக்கில் தற்போது அதிமுகவினர் கைது செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இதில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்திட வேண்டும்.

பொங்கல் பரிசுத் தொகை மீண்டும் டாஸ்மாக் மூலமாக அரசுக்கு வந்து விடும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பதன் மூலம், அதிமுக அரசின் உண்மை நோக்கம் என்ன என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்திட வேண்டும் என்பது அவர்களது நோக்கமா அல்லது அவர்களுக்கு உதவிடுவது போன்று நடித்து, அவர்களிடம் இருந்து பணத்தைப் பெறுவதுதான் நோக்கமா என்பதனை அமைச்சரின் கருத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

நியாயவிலைக் கடைகளில் அதிமுகவினர் பொங்கல் பரிசு வழங்குவது சம்பந்தமாகப் பிரச்சாரம் மேற்கொள்வது, ஒரு கட்சி சார்பில் வழங்குவது போல செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இது தவறான முன் உதாரணம். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலினை ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்து, அதன்படி கூட்டணிக் கட்சியினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால், அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதிலேயே பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. பாஜகவும், பாமகவும், முதல்வர் வேட்பாளரைத் தாங்கள்தான் அறிவிப்பதாகத் தெரிவித்து வருகின்றனர். அதிமுகவில் உள்ளவர்களே முதல்வர் வேட்பாளர் குறித்து மாறி மாறிக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்று குழப்பத்தில் உள்ள அதிமுகவும், அதன் கூட்டணிக் கட்சியினரும், திமுக கூட்டணியில் குழப்பம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது''.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

பேட்டியின்போது, சேலம் கிழக்கு மாவட்டக் காங்கிரஸ் கட்சித் தலைவர் அர்த்தனாரி உடன் இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x