Published : 06 Jan 2021 07:30 PM
Last Updated : 06 Jan 2021 07:30 PM
மதுரை மாநகராட்சியில் குடியிருப்பு சாலைகள் அனைத்தும் மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மாறி பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு மிக மோசமாகக் காணப்படுகிறது.
மதுரை மாநகராட்சியில் தற்போது ரூ.35 கோடியில் ‘40 பேக்கேஜ்’ அடிப்படையில் புதிய சாலைகள் போடப்படுகிறது. இந்த புதிய சாலைகள் அனைத்தும் சேதமடைந்த முக்கிய நகரச்சாலைப் பகுதிகளில் மட்டுமே போடப்படுகிறது.
குடியிருப்புப் பகுதி சாலைகள் புதிதாகப் போடப்படவில்லை. தற்போதுள்ள சாலைகளும் பராமரிக்கப்படவில்லை. விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி வார்டுகளில் சாலைகளே போடப்படவில்லை. தற்போது வரை மண் சாலைகளே குடியிருப்புப் பகுதிகளில் சாலைகளாக பயன்படுத்தப்படுகிறது. அதுபோல், ஏற்கெனவே சேதமடைந்து குண்டும், குழியுமான குடியிருப்பு சாலைகள் பராமரிக்கப்படவில்லை. புதிதாக போடப்படவும் இல்லை.
தற்போது மதுரையில் அடிக்கடி மழை பெய்கிறது. இந்த மழைக்கு குடியிருப்புப் பகுதிகளில் ஏற்கெனவே சேதமடைந்த சாலைகள், மண் சாலைகள் அனைத்தும் குழிகள் தெரியாமல் மழைநீர் தேங்கியும், சேறும், சகதியுமாக அலங்கோலமாக மாறியுள்ளன.
சைக்கிள், இருச்சக்கர வாகனங்களில் இந்தச் சாலைகளில் சென்றால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுகின்றனர். பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சாலை முழுவதும் சேறுமயமாகி உள்ளன.
பெரும்பாலான தெருக்களில் தெருவிளக்குள் பராமரிப்பு இல்லாமல் இரவு எரியததால் இந்த மழைக்கு அலங்கோலமான சாலைகளில் நடந்து வரும் பொதுமக்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து செல்கின்றனர். முதியவர்கள், பெண்கள் குடியிருப்புப் பகுதி சாலைகளில் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மணிகண்டன் கூறுகையில், ‘‘மாநகராட்சி ஊழியர்கள், குடியிருப்பகுதி சாலைகளில் குடிநீர் குழாய்கள் அமைப்பதற்கும், பாதாள சாக்கடைப் பணிகளுக்காகவும், தற்காலிக பராமரிப்புப் பணிகளுக்காகவும் சாலைகளை குழிதோண்டிப்போட்டு அதனை மூடாமலும், அப்படியே மூடினாலும் அது சரியாக மூடாமலும் விட்டுச் சென்றுவிடுகின்றனர்.
தற்போது மழை தீவிரமாகப் பெய்வதால் அந்த மழைநீர் சாலைகளில் உள்ள இந்தப் பள்ளங்கள், குழிகளில் போய் தேங்கிவிடுகிறது. மழை நீர் பெருக்கெடுத்து ஓடும்போது வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் சாலையில் எது பள்ளம், மேடு என்று தெரியாமல் செல்லும் அவலம் உள்ளது. மழை பெய்யும் போது சாலைகளில் உள்ள குழிகளில் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனங்களுடன் விழுந்து கால், கை உடைந்து பாதிக்கப்படும் அவலமும் நடக்கிறது.
குறிப்பாக எஸ்.எஸ்.காலனி, சக்திவேலம்மாள் சாலை, ஜவஹகர் மெயின் ரோடு, பாரதியார் மெயின் ரோடு உள்ளிட்ட அனைத்து சாலைகளும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக காணப்படுகின்றன.
இப்பகுதியில் இரு பிரதான வங்கிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிகம் வந்து செல்லும் சாலைகளாக உள்ளன. அதனால், மாநகராட்சி முக்கிய பகுதி சாலைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் பராமரிப்பு இல்லாத குடியிருப்பு சாலைகள் அனைத்தையும் கணக்கெடுத்து அதை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT