Published : 06 Jan 2021 05:55 PM
Last Updated : 06 Jan 2021 05:55 PM

எந்தெந்தத் துறையில் ஊழல் நடந்துள்ளது? நேரில் விவாதிக்கத் தயாரா?- ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி சவால்

சென்னை

ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு, அதிமுக ஆட்சியில் ஊழல் ஊழல் என்று தவறான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார். நான் சவால் விடுகிறேன். எந்ததெந்தத் துறையில் என்னென்ன ஊழல் நடந்திருக்கிறது. நீங்கள் கேட்கிற கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன். நான் கேட்கிற கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் என ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி சவால் விட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், அத்தாணியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

''நான் முதல்வராகப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் 10 மாதங்கள் ஆகின்றன. நான் முதல்வராகப் பொறுப்பேற்றபோது திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியை உடைக்க முயன்றார். ஆட்சியைக் கலைக்க நினைத்தார். இது உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். அதை எல்லாம் மக்களின் துணையோடு தகர்த்து, இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சி உங்களின் ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பத்து நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் அதிமுக மூன்றாக உடைகிறது என்று பேசினார். அடுத்த கட்சியை உடைத்துதான் வர வேண்டும் என்று நினைக்கின்ற ஸ்டாலின் எப்படிப்பட்ட சுயநலவாதி என்று பாருங்கள். உழைத்து முன்னேறுவது எல்லாம் கிடையாது, குறுக்கு வழியைக் கையாண்டு, அதன்மூலம் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் ஸ்டாலினுக்கு வருகின்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தைக் கற்பிக்க வேண்டும்.

இந்த அரசாங்கம் உங்களுடைய அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம். மக்கள் என்ன உத்தரவு போடுகிறார்களோ அதை நிறைவேற்றுகின்ற அரசு உங்களுடைய அரசு. நீங்கள் அனைவரும் முதல்வர்கள். நீங்கள் நினைக்கின்ற பணியை முடிக்க வேண்டியது முதல்வரின் பணி. திமுக தலைவர் ஸ்டாலின் எப்பொழுது பார்த்தாலும் தான் முதல்வராக ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறார். முதல்வர் பதவி என்ற வெறியோடு இருக்கிறார். இத்தகைய பதவி வெறியோடு இருப்பவரிடம் ஆட்சியைக் கொடுத்தால் நாடு துண்டாகிவிடும்.

திமுகவில் குடும்ப வாரிசு அரசியல் நடந்து வருகிறது. கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி. ஏன் இவர்களுக்கு மட்டும்தான் பட்டா போட்டு இருக்கிறதா? ஏன் ராமசாமி, குப்புசாமி வந்து முதல்வரானால் நாற்காலி ஏற்றுக்கொள்ளாதா? ஏன் நாங்கள் எல்லாம் வரக்கூடாதா? அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதி கல்யாண மேட்டில்தான் பிறந்தேன். அதனால் இந்த அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியை முழுவதும் நான் அறிந்தவன்.

பழனிசாமி ஒரு விவசாயி, அவருக்கு ஒன்றும் தெரியாது. அவரை எப்படியாவது வீட்டிற்கு அனுப்பிவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டார் ஸ்டாலின். நான் பதவியேற்றபோது, இந்த ஆட்சி 10 நாட்களில் போய்விடும், ஒரு மாதத்தில் போய்விடும், ஆறு மாதங்களில் போய்விடும் என்று சொன்னார். ஆனால், மக்களின் துணை கொண்டும், அதிமுகவின் துணை கொண்டும் நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டை ஆளக்கூடிய தகுதி இந்த நாட்டிலே பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அதையாரும் மறுக்க முடியாது.

ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக ஆட்சியில் ஊழல் ஊழல் என்று தவறான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார். நான் சவால் விடுகிறேன். எந்ததெந்தத் துறையில் என்னென்ன நடந்திருக்கிறது. நீங்கள் கேட்கிற கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன். நான் கேட்கிற கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். இந்த ஆட்சியின் மீது எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் பொய் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகிறார்.

எங்களுக்கு மடியில் கனம் இல்லை. அதனால் வழியில் பயம் இல்லை. இந்தியத் திருநாட்டிலே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு அரசாங்கம் என்றால் அது திமுக அரசாங்கம்தான். அதனால் உங்களுக்கு ஊழலை பற்றிப் பேசுவதற்குத் தகுதி கிடையாது. திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து வழக்குகளும் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. இதுவரை வாய்தா வாங்கி தப்பித்து வந்தீர்கள்.

நேற்றைய தினம் உயர் நீதிமன்றம், வழக்குகளில் வாய்தா வாங்கிக் கொண்டே இருக்கிறீர்கள் இனி வாய்தா கொடுக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் வழக்கை முடித்தாக வேண்டும் என்று உத்தரவிட்டது. வரும் மார்ச் ஏப்ரல் மாதத்திற்குள் உங்களின் வழக்குகள் மீதான விசாரணை முடிந்துவிடும். அவர்கள் எல்லாம் எங்கே போக வேண்டுமோ அந்த இடத்திற்குப் போய்விடுவார்கள்.

அதிமுக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை மக்களிடம் பரப்பி வருவதை விட்டுவிட்டு, நேர்மையான வழியில் மக்களைச் சந்தித்து, ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்று சொல்லி வாக்கு கேளுங்கள். நீங்கள் மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டீர்கள். செய்தும் பழக்கம் கிடையாது.

இன்றைக்கு அரசுப் பள்ளிகளில் ஏழை எளிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரது குழந்தைகள்தான் படிக்கின்றார்கள். நானும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். அந்த ஏழை எளிய மக்களின் குழந்தைகள் மருத்துவம் பயில வேண்டுமென்ற கனவை நனவாக்கியது இந்த அரசுதான்.

தைப்பொங்கலை ஏழை எளிய மக்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பை அரசு வழங்கி வருகிறது. நானும் ஒரு விவசாயி. விவசாயிகளுடைய கஷ்டத்தை உணர்ந்தவன்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x