Last Updated : 06 Jan, 2021 04:30 PM

 

Published : 06 Jan 2021 04:30 PM
Last Updated : 06 Jan 2021 04:30 PM

நெல்லையில் தொடர் மழையால் பொங்கலுக்கான மண்பாண்டங்கள் உற்பத்தி பாதிப்பு: இவ்வாண்டு 10% விலை உயர்வு

திருநெல்வேலி

திருநெல்வேலியில் தொடர் மழையால் பொங்கலுக்கான மண்பாண்டங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வப்போது வெயிலில் உலர்த்தி எடுக்கப்பட்டுள்ள மண்பாண்டங்களின் விலை கடந்த ஆண்டைவிட 10% அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் கைவினை கலைஞர்களால் விதவிதமாக வடிவங்கள் மற்றும் அளவுகளில் மண் பானைகள் தயாரிக்கப்படுகின்றன. பொங்கலுக்கு 2 மாதங்களுக்கு முன்னரே இப்பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள்.

திருநெல்வேலி மேலப்பாளையம் குறிச்சி, காருகுறிச்சி, ஆழ்வார்குறிச்சி, ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொங்கலுக்கான பானை, சட்டி, மூடி, அடுப்பு, தீப விளக்குகள், பூந்தொட்டிகள், கும்ப கலசங்கள், தீச்சட்டி என்று பல்வேறு மண்பாண்டங்களை தயாரிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் ஆற்றுப்படுகைகள், குளங்கள், நீராதாரங்களின் படுகைகளில் இருந்து மண்பாண்டங்கள் தயாரிக்க கைவினை கலைஞர்களால் ஆண்டாண்டு காலமாக களிமண் எடுக்கப்பட்டு வந்தது. இந்த களிமண்ணுடன் ஆற்றங்கரைகளில் இருந்து கிடைக்கும் பசை தன்மையுள்ள குறுமண்ணை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து மண்பாண்டங்களை தயாரிக்கிறார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே நீராதாரங்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் இருந்து மண்பாண்டங்கள் தயாரிக்கப்படும் மண் எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மணல் கடத்தல் என்று சிலர் செய்யும் தவறுகளால் மண்பாண்ட கலைஞர்களுக்கு தேவையான மண் கிடைக்காமல் இருப்பதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்குமுன் அரசு அனுமதியோடு அள்ளி சேமித்துவைத்த மணலை கொண்டுதான் மண்பாண்டங்கள் தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள்.

இவ்வாண்டு பொங்கலுக்கான மண்பாண்டங்கள் தயாரிப்பு தொடர் மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் மண்பாண்ட பொருட்களை சூளையில் வைத்து சுட்டு எடுப்பதற்காக பயன்படும் விறகு, வைக்கோல் போன்ற மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் மண்பாண்டங்களின் விலையும் இவ்வாண்டு 10 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக குறிச்சி மண்பாண்ட தொழிலாளர் கூட்டுறவு சங்க துணை தலைவர் ஏ. கணேசன் கூறியதாவது:

அவ்வப்போது அடித்த வெயிலில் உற்பத்தி செய்த மண்பாண்டங்களை விற்பனை செய்து வருகிறோம். பொங்கல் பானைகள் 1 கிலோ- ரூ.130, முக்கால் கிலோ ரூ.100, அரை கிலோ ரூ.80 என்று பல்வேறு ரகங்களில் விற்பனை செய்யப்படுகிறது. மண்பாண்ட அடுப்பு ரூ.100 முதல் ரூ.120வரையிலும், சட்டி ரூ.60, ரூ.70, ரூ.80 என்றும், 3 பொங்கல் அடுப்பு கட்டிகள் ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விதை நெல் பானைகள் ஒன்று ரூ.750 வரையிலும் ஜோடியாக வாங்கினால் ரூ.900 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பானைகளில் ஆயில் பெயின்ட் மூலம் டிசைன் வரையப்படுகிறது. பொங்கலையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் பானைகள், அடுப்புகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x