Published : 06 Jan 2021 04:10 PM
Last Updated : 06 Jan 2021 04:10 PM
தலையில் கரகம், கைகளில் தீச்சட்டியுடன், பானை மேல் 1.5 மணி நேரம் நின்று, கோவையைச் சேர்ந்த கிராமியப் பெண் கலைஞர் பிரியங்கா தேவி சாதனை படைத்துள்ளார்.
கோவை மாவட்டம் செரயாம்பாளையத்தைச் சேர்ந்த செந்தில் குமார்- ராஜேஸ்வரி தம்பதியின் மகள் எஸ்.பிரியாங்கா தேவி. கிராமியப் பெண் கலைஞரான இவர், காந்திமாநகர் பகுதியில் உள்ள 'கிராமியப் புதல்வன்' அமைப்பு, இலவசமாக நடத்தி வரும் பாரம்பரிய கிராமியக் கலை வகுப்பில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று (ஜன.6) காலை பயிற்சி வகுப்பின்போது தலையில் கரகம், இரு கைகளிலும் தீச்சட்டியுடன், மண்பானை மேல் ஒன்றரை மணி நேரம் அவர் நின்ற நிகழ்வானது, 'ஃபீனிக்ஸ் புக்ஸ் ஆஃப் ரெக்கார்டு' புத்தகத்தில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து பிரியங்கா தேவி 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறும்போது, “செரயாம்பாளையத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். என்னுடைய பெற்றோர் கூலித் தொழிலாளிகள். நான் பி.காம். முடித்துவிட்டு, தொலைதூரக் கல்வி வழியாக எம்பிஏ படித்து வருகிறேன். சிறு வயது முதலே நாட்டுப்புறக் கலைகள் மீது மிகுந்த ஈடுபாடு உள்ள போதிலும், அதை முறையாகக் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஓராண்டுக்கு முன்னர் எங்கள் அமைப்பின் ஆசிரியர் ஆர்.கலையரசனைச் சந்தித்து அனுமதி பெற்று, கிராமியக்கலை வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெறத் தொடங்கினேன்.
கரகாட்டம், பறை இசைத்தல், கோலாட்டம் போன்றவற்றைக் கற்று வருகிறேன். ஆசிரியரின் பயிற்சி மற்றும் ஆலோசனையின் பேரில், இன்று தலையில் கரகம், கைகளில் தீச்சட்டி ஏந்தியவாறு மண்பானை மேல் நின்றது, 'ஃபீனிக்ஸ் புக்ஸ் ஆஃப் ரெக்கார்டு' புத்தகத்தில் பதிவாகியுள்ளது. இதனால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்
நம்முடைய பாரம்பரியக் கலைகள் மீது எனக்கு மிகவும் ஈடுபாடு உண்டு. அதை கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் தற்போது கிடைத்துள்ளது. கிராமியக் கலைகள் மீது இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தொடர்ந்து இதைப் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவேன்”.
இவ்வாறு எஸ்.பிரியங்கா தேவி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT