Published : 06 Jan 2021 03:30 PM
Last Updated : 06 Jan 2021 03:30 PM
நேர்மைக்கும், ஊழலுக்கும் இடையே நடைபெறும் போரில் மக்கள் நேர்மையின் பக்கம் இருக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜன.06) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
"தமிழகம் முக்கியமான அரசியல் திருப்புமுனையில் நின்று கொண்டிருக்கிறது. அதை முன்நின்று வழிநடத்தும் கடமை மக்களிடம் இருக்கிறது. அதற்கான கருவி நான். மக்கள் நீதி மய்யம் 3 வயதுக் குழந்தை. நடக்கும் குழந்தையை மக்கள் ஓட வைத்துள்ளனர்.
இக்கட்சியைத் தொடங்கியபோது, இது வளர்ச்சி பெறாது, விரைவில் காணாமல் போகும் என விமர்சித்தவர்கள் மத்தியில் மக்கள் அதீத வளர்ச்சியை ஏற்படுத்திவிட்டனர். இது போதாது. என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், மக்களிடம் உள்ள இந்த எழுச்சி அரசியல் மாற்றமாக இருக்க வேண்டும். நேர்மைக்கும் மோசடிக்கும் இடையே போர் நடந்து கொண்டிருக்கிறது. ஊழலுக்கும் நேர்மைக்கும் இடையே நடைபெறும் இந்தப் போரில் மக்கள் நேர்மையின் பக்கம் இருக்க வேண்டும்.
தேர்தலில் யார் வென்றாலும் எனக்கு ஒன்றுமில்லை என யாரும் இருக்கக் கூடாது. நேர்மையின் பக்கம் நின்று அரிய வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தேர்தலின்போதும், அரசியல் கட்சி வேட்பாளர்கள் மக்கள் முன்னிலையில் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். நான் மக்களிடம் ஒரு வாக்குறுதி கேட்கிறேன், நேர்மையை ஆதரியுங்கள் என்பதுதான் அது.
தனி மனிதனால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அனைவரும் ஒன்றுசேர்ந்து வடத்தைப் பிடித்து இழுத்தால்தான் தேர் வரும். அதேபோல, இங்கு கூடியிருக்கும் மக்கள் நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுத்தால் நிச்சயம் நாளை நமதே.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் சுத்தமான தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எங்கு பார்த்தாலும் திறந்தவெளி கால்வாய் காட்சியளிக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் சாக்கடை போல காணப்படுகிறது. இதையெல்லாம் மாற்ற வேண்டும். கல்வியின் தரத்தை மாற்ற வேண்டும். அதற்கான திட்டங்களை மக்கள் நீதி மய்யம் வைத்துள்ளது.
என் மீது அன்பு கொண்டவர்கள் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களாக மாற வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து என் கூட்டத்துக்கு வருவோர்கள் இக்கட்சியில் உறுப்பினர்களாக இணைய வேண்டும் என்பதே என் விருப்பம். அவ்வாறு சேரும்போது, மக்களுக்காகச் சேவகம் செய்வோரை நாம் அதிகமாக உருவாக்க முடியும்.
நான் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளேன். இன்னும் 3 மாதங்களே உள்ளன. ஜனநாயகம் புத்துயிர் பெற வேண்டும். அதை மக்கள் செய்து காட்ட வேண்டும்".
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
ஆம்பூரைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலும் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அதன் பிறகு, காட்பாடியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, வாலாஜா உள்ளிட்ட பகுதிகளிலும் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT