Published : 20 Oct 2015 10:25 AM
Last Updated : 20 Oct 2015 10:25 AM

தமிழகத்தில் தொடர் வறட்சியால் மலையடிவார விவசாய நிலங்களில் அழிந்துவரும் நுண்ணுயிர்கள்: குழி எடுத்து வரப்பு அமைக்க நிபுணர்கள் யோசனை

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் பல்வேறு வகையான 73 மலைத்தொடர்கள் சிறிய சிறிய குன்றுகளாக அமைந்துள்ளன. இப்பகுதி மலையடிவார விவசாய நிலங்கள், செம்மண் சரளை நிலமாக உள்ளன. இந்த நிலங்களில் அதிகளவு தோட்டக்கலைப் பயிர்கள், தென்னை மரங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

ஆழ்துளை கிணறுகள்

பொதுவாக மலையடிவாரத்தில் திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் தேங்கவும், நிற்கவும் செய்யாது. ஆனாலும், தோட்டக்கலைப் பயிர்களுடைய நீர் தேவைக்காக, மலையடிவாரப் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவு திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகளும் அமைத்துள்ளனர். பஞ்சாயத் துகளும், தங்களுடைய குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதிகளவு நீரை உறிஞ்சுகின்றன.

குறைந்த மழையளவு உள்ள இக்காலத்தில் மலையடிவாரத்தில் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதால் தோட்டக்கலைப் பயிர், மரங்கள் தண்ணீர் இன்றி கருகுவதாக விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர். இதுகுறித்து நீர் வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் திண்டுக்கல் மாவட்ட விரிவாக்க அலுவலர் பிரிட்டோ ராஜிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

நோயிலிருந்து பாதுகாக்க..

பொதுவாக 3 ஆண்டுகள் வளர்ந்த தென்னை, கொய்யா, மா மரங்களுக்கு தினசரி 100 முதல் 120 லிட்டர் தண்ணீரும், வறண்ட காலங்களில் குறைந்தபட்சம் 60 லிட்டர் தண்ணீரும் தேவையுள்ளது. தொடர்ந்த வருமானத்துக்கும், மரத்தின் ஆயுளை நீட்டிப்பதற்கும், நோயில் இருந்து பாதுகாக்கவும் நீர் இன்றியமையாதது.

14 மலையடிவார மாவட்டங்கள்

ஆனால், குறைந்துவரும் நீர் தேவையினால், தரையில் இருந்து ஒன்றரை அடி முதல் இரண்டே முக்கால் அடி வரை ஆழத்தில் அமைந்துள்ள இந்த மரங்கள் மற்றும் பயிர்களுடைய வேர்களுக்கு குறைந்தளவு நீரே செல்கிறது. அதனால், மண்ணில் நுண்ணுயிர்களின் அளவு அழிந்து வருகிறது. 14 மலையடிவார மாவட்டங்களில் சாகுபடி செய்த தென்னை, கொய்யா, மா உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் காய்ந்தும், அழிந்தும் வருகிறது. இதனால், தமிழகத்தில் 7.5 சதவீத தோட்டக்கலைப் பயிர் சாகுபடி குறைந்துள்ளது.

இந்த நுண்ணுயிர்களைப் பெருக்க நுண்ணுயிர் உரங்கள் அளித்தாலும், தண்ணீர் பற்றாக் குறையால் அவை வளருவதில்லை. வேர்கள் அமைந்துள்ள இடத்தில் நுண்ணுயிர்கள் இருக்க வேண்டும். அதற்கு மண்ணில் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே நுண்ணுயிர்கள் காணப்படும். வெயில் காலத்தில் செம்மன் சரளை நிலங்கள் அதிகளவு வெப்பமாகும் என்பதால் நுண்ணுயிர்கள் அழிகிறது என்றார்.



நுண்ணுயிர் பெருக்கத்துக்கு என்ன வழி?

பிரிட்டோ ராஜ் மேலும் கூறியதாவது:

நுண்ணுயிர்களை அதிகரிக்க மலையடிவாரப் பகுதிகளில் குழி எடுத்து வரப்பு அமைக்க வேண்டும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் மொத்தம் 200 மீட்டர் நீளத்தில் 20 மீட்டர் நீளம், 0.9 மீட்டர் அகலம், 0.9 மீட்டர் ஆழம் என்றளவில் 5 குழிகள் என்ற விகிதத்தில் இரண்டு அடுக்குகளில் 10 குழிகள் அமைக்கப்பட வேண்டும்.

தோண்டப்பட்ட குழிகளின் கீழ் பகுதிகளில் தொடர்ச்சியான கரை அமைக்க வேண்டும். இதன் மூலம் சரிவின் குறுக்கே ஓடிவரும் மழை நீர் குழிகளில் சேகரிக்கப்பட்டு, ஒரு ஹெக்டேர் நிலத்தில் சுமார் 16,200 லிட்டர் மழை நீரை சேகரிக்கலாம். ஜேசிபி இயந்திரம் கொண்டு இந்த குழிகள் அமைக்க ஒரு ஹெக்டேருக்கு 5 முதல் 6 மணி நேரம் என்றளவில் ரூ.4 ஆயிரம் செலவாகிறது.

இம்முறையினால் ஆண்டுக்கு 400 மி.மீ. என்ற குறைந்தளவு மழை கிடைத்தாலே, அந்த நிலத்தின் மேல் மண் ஈரப்பதம் அதிகமாகி மரங்களுக்கு தொடர்ச்சியான நிலத்தடி நீர் கிடைக்கும். வறண்ட மானாவாரி நிலங்கள் உள்ள கிருஷ்ணகிரி முதல் விருதுநகர் வரையிலான 14 மேட்டுப்பகுதி மாவட்டங்கள் இம்முறையை ஏற்படுத்தி பயன்பெறலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x