Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பியதால் உபரிநீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரி நேற்று மீண்டும் நிரம்பியது. இதனால் உபரி நீர் திறக்கப்பட்டது. படம்: எம்.முத்துகணேஷ்

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்

தொடர்மழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் முழுமையாக நிரம்பியதால், நேற்று உபரிநீர் திறக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 3.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 24 அடி. புழல் ஏரியில் நேற்று மதிய நிலவரப்படி 3,257 மில்லியன் கனஅடி நீர் இருப்பும், 21.12 அடி நீர் மட்டமும் உள்ளது. 2 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியதால் விநாடிக்கு தலா 500 கன அடிநீர் வெளியேற்றப்பட்டது. புழல் ஏரியில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 1500 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது, மேலும் ஏரிக்கு நீர் வரத்தைப் பொருத்து உபரிநீர் திறந்து விடுவது அதிகரிக்கப்படும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து அடையாறு, கொசஸ்தலை ஆறுகளின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் தாழ்வாக உள்ளவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்கள் போதிய ஏற்பாடுகளை செய்துள்ளன. அதேபோல், மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் தரும் மற்ற ஏரிகளான சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஆகியவற்றிலும் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.

வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டுமே ஏரியின் உபரிநீர் திறக்கப்படும். இதற்கு முன் கடந்த 1986-ம் ஜனவரி மாதம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. அதன்படி 35 வருடத்துக்குப் பின் தற்போது ஏரியில் இருந்து ஜனவரி மாதம் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் மூன்றாவது முறையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

ஏரிகளில் நீர் மட்டம் உயர்வு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 1,483 ஏரிகளில், 1,091 ஏரிகள் நிரம்பின. அதன் பிறகு விவசாய பயன்பாடு குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக தண்ணீர் பயன்படுத்தப்படுவதால், ஏரியில் நீர்மட்டம் 10 முதல் 20 சதவீதம் குறைந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழையால் அனைத்து ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. இன்று அல்லது நாளை 3 மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்ப வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித் துறையினர் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x