Published : 06 Jan 2021 03:14 AM
Last Updated : 06 Jan 2021 03:14 AM
விழுப்புரம் எஸ்.பிக்கு ஆயுதப்படை காவலர் ஒருவர் தற்கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார். அது தொடர்பாக எஸ்.பி ராதாகிருஷ்ணன் ஆயுதப்படை மைதானத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ராதாகிருஷ் ணனுக்கு நேற்று முன்தினம் அஞ்சலில் கடிதம் ஒன்று வந்தது. அனுப்புநர் பெயர், முகவரி இல்லாமல் ஆயுதப்படை காவலர் ஒருவர் எழுதுவதாக கடிதம் அமைந்திருந்தது.
அதில், “நான் கடந்த 2013-ம் ஆண்டு நேரடியாக ஆயுதப்படைக்கு தேர்வாகி 8 ஆண்டுகளாக விழுப்புரம் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றுகிறேன். கடந்த 2017-ம்ஆண்டு சென்னைக்கு குடும்பச் சூழல் காரணமாக மாறுதலாகி, பின் அதே ஆண்டு விழுப்புரத்துக்கு பணிமாறுதல் பெற்று வந்து விட்டேன். ஆனால் என்னுடைய முன்னுரிமை மாறுதலாகி விட்டது. என்னுடன் பணியில் சேர்ந்த சக காவலர்கள், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று விட்டனர்.நான் மட்டும் ஆயுதப்படை பிரிவிலேயே பணியாற்றி வருகிறேன். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக எனது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது.
ஆயுதப்படையில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு முறையாக பணிமாறுதல் வழங்காமல் காவல் அலுவலர்கள் கஷ்டப்படுத்துகிறார்கள். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை மறந்து விட்டார்கள். நான் 2018-ல் இருந்து இதுவரை 5 முறை விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு விருப்ப மனு அனுப்பியும், இதுவரை எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னுடைய இறப்புக்கு பிறகு நான் யார் என்று தெரியவரும். அதன் பிறகாவது இதுபோன்ற பிரச்சினையால் காவலர்கள் இறப்பதை குறைக்க வழிவகை செய்யுங்கள். என் இறப்புக்கு காரணம் சொல்லிவிட்டேன். ஆனால் என்னுடைய இறப்பை எந்த சூதாட்டத்திலும் சம்பந்தப்படுத்தி விடாதீர்கள்’‘ என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
எஸ்.பி நேரில் விசாரணை
இதையடுத்து, அந்தக் கடிதத்துடன் எஸ்.பி ராதாகிருஷ்ணன், விழுப்புரம், கா குப்பத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவுக்குச் சென்று விசாரணை நடத்தினார். அங்குள்ள காவலர்களை அழைத்து அவர்களிடம் அறிவுரை வழங்கினார்.
அங்குள்ள காவலர்களிடத்தில் பேசிய அவர், “உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள், குறைகள் இருந்தால் உடனடியாக என்னை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதுபோன்று முகவரியில்லாத கடிதம் அனுப்பினால் யாருக்கு என்ன பிரச்சினை உள்ளது என்று எப்படி தெரியும். என்னை தனிப்பட்ட முறையில் நேரில் சந்திக்க பயப்பட தேவையில்லை. உடனடியாக உங்களது குறைகளை நிவர்த்தி செய்வேன்” என்றார். பின்னர் அந்தக் கடிதத்தை அங்குள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டுமாறு உத்தரவிட்டார்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, “2013ம் ஆண்டு பேட்சில், தேர்வாகி விழுப்புரம் ஆயுதப்படையில் பணியாற்றி, பின்னர் பணி மாறுதலில் சென்னை சென்று மீண்டும் விழுப்புரம் வந்தவர் என்ற ‘க்ளூ’வின் அடிப்படையில் தற்கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் அவர் யாரென்று கண்டறிந்து, விசாரணை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT