Published : 05 Jan 2021 06:44 PM
Last Updated : 05 Jan 2021 06:44 PM
வாக்காளர் பட்டியல் சம்பந்தமாக திமுக தொடர்ந்த வழக்கில் அறிக்கை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசு, தனது மாவட்டத்தின் கீழ் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் சமர்ப்பித்த படிவம் 7-ன் கீழ் வாக்காளர் பட்டியலிலிருந்து இறந்தவர்கள் பெயர்களை நீக்குவதற்காக வாக்காளர் பட்டியல் சீரமைப்பு பணிகளின்போது கொடுக்கப்பட்டிருந்த மனுக்களின் மீது தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடந்த 15.12.2020 வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இறந்தவர்களின் பெயர்களை நீக்கவில்லை என்றும் புகார் எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மனுவினை சிற்றரசு சமர்ப்பித்திருந்தார். அந்த மனு மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அவர் குற்றச்சாட்டு எழுப்பினார்.
இந்நிலையில், சிற்றரசு சார்பாக மனுராஜ், கே.ஜே.சரவணன் மற்றும் ஜே.பச்சையப்பன் ஆகிய திமுக வழக்கறிஞர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் சமர்ப்பித்த படிவங்களின் அடிப்படையில் இறந்தவர்கள் பெயர்களை நீக்க வேண்டும் என்று கோரி, ரிட் மனுவைத் தாக்கல் செய்தனர்.
அந்த மனு இன்று (ஜன.05) நீதிபதிகள் சத்தியநாராயணன் - நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, திமுக வழக்கறிஞர் மனுராஜ் ஆஜராகி வாதிட்டார். அவரது வாதத்தினை ஏற்ற நீதிபதிகள், இரண்டு வாரங்களுக்குள் மனுதாரரின் கோரிக்கையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், படிவம் 7-ன் கீழ், முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுகுறித்து மனுதாரருக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு இந்த வழக்கினை முடித்து வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT