Published : 05 Jan 2021 06:17 PM
Last Updated : 05 Jan 2021 06:17 PM
காங்கிரஸ்- பாஜக போராட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து சிஐஎஸ்எப் 3 கம்பெனி புதுச்சேரிக்கு நாளை வருகிறது. இதன் மூலம் ஆளுநர் மாளிகை, முதல்வர் வீட்டுக்குக் கூடுதல் பாதுகாப்பு தரப்படவுள்ளது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் நான்கரை ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தொடர் மோதலால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினரும் மாறிமாறிக் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு கிரண்பேடியைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு, கருப்புச் சட்டையுடன் நாராயணசாமி, அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 6 நாட்கள் இந்தப் போராட்டம் நீடித்து பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்தது. ஆனால், வாக்குறுதி அளிக்கப்பட்ட திட்டங்கள் ஏதும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.
தறி்போது சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கிரண்பேடியைக் கண்டித்து மீண்டும் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளான இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வரும் 8-ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்போம் என அறிவித்துள்ளனர். ஆனால், முக்கியக் கூட்டணிக் கட்சியான திமுக ஆதரவு தெரிவிக்கவில்லை.
தற்போது தங்கள் போராட்டத்திற்கு வலு சேர்க்க காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் புதுவை முழுவதும் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தில் முதல்வர், அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். இப்பிரச்சாரக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவி்ல்லை. அதேபோல் முக்கிய அமைச்சரான நமச்சிவாயமும் பங்கேற்கவில்லை.
இத்தகைய சூழலில் ஆளுநர் கிரண்பேடி, "சட்டத்துக்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டே எனது கடமைகளைச் செய்து வருகிறேன். மக்களைத் தவறான வழியில் நடத்தாதீர்கள்" என்று பதில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் போராட்டத்திற்குப் போட்டியாக பாஜகவும் ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்வர் நாராயணசாமியின் வீட்டைத் தொடர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ், பாஜகவின் போராட்டங்களால் புதுவையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
போராட்டங்கள் நடப்பது உறுதியாக உள்ளதால் சட்டம்- ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காகக் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் வகையில், பாதுகாப்புப் பணிக்கு 5 கம்பெனி அடங்கிய, துணை ராணுவக் குழுவைப் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்குமாறு டிஜிபி பாலாஜி ஸ்ரீ வச்தவா, மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதினார்.
இது தொடர்பாகக் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "டிஜிபி கடிதத்தை ஏற்றுக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், நாளை (ஜன.6) மாலை மத்தியத் தொழில் நிறுவன பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எப்) 3 கம்பெனியை புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கிறது. இவர்கள் ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, முதல்வர் நாராயணசாமி வீடு ஆகியவற்றின் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT