Published : 05 Jan 2021 01:27 PM
Last Updated : 05 Jan 2021 01:27 PM

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் பிற்பகல் 2 மணிக்கு திறப்பு; முதல் கட்டமாக 500 கன அடி நீர் வெளியேற்றப்படும்: காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்.

காஞ்சிபுரம்

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் இன்று பிற்பகல் 2 மணியளவில் முதல் கட்டமாக 500 கன அடி நீர் வெளியேற்றப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, நேற்று (ஜன.04) நள்ளிரவு முதலே சென்னையின் பல இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவாக, சென்னை, மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், இன்று (ஜன.05) பிற்பகல் 2 மணியளவில் ஏரியிலிருந்து முதல் கட்டமாக 500 கன அடி நீர் வெளியேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ. பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்டம் மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும்.

தற்போது வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்து வரும் மழையினால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இன்று (ஜன.05) காலை 8 மணி நிலவரப்படி 23 அடியை நெருங்குவதாலும், மழையின் காரணமாக ஏரியின் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் இன்று பிற்பகல் 2 மணி அளவில் முதல் கட்டமாக 500 கன அடி நீர் வெளியேற்றப்படும். ஏரிக்கு வரும் வெள்ள நீரின் அளவினைப் பொறுத்து படிப்படியாக அவ்வாறே வெளியேற்றப்படும்.

எனவே, செம்பரம்பாக்கம் ஏரியின் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் பகுதிகளான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களில் தங்கும்படியும், மேலும், உபரிநீர் திறந்துவிடும்போது பொதுமக்கள் கரையோரம் நின்றோ, கூட்டமாகச் சென்றோ வேடிக்கை பார்க்கக் கூடாது".

இவ்வாறு ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x