Published : 05 Jan 2021 01:20 PM
Last Updated : 05 Jan 2021 01:20 PM
ரஜினி ரசிகர்கள் அறவழிப் போராட்டம் நடத்தவுள்ளது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை நீண்ட அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்திவிட்டார் ரஜினிகாந்த். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரஜினி அறிக்கை வெளியான அன்றே, அவருடைய வீட்டு வாசலில் ரசிகர்கள் ஒன்றுதிரண்டு கோஷங்களை எழுப்பினார்கள். தற்போது ஜனவரி 10-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அறவழிப் போராட்டத்துக்கு ரஜினி ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதில் சில ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் அடங்குவர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் ஈ.சந்தானம் விடுத்துள்ள அறிக்கையில், "நம் தலைவரின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து சிலர் 10.01.2021 அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவருகிறது. அக்கூட்டத்தில் நம் மாவட்டத்தைச் சார்ந்த மாவட்ட, பகுதி, வட்ட பிற அணி மற்றும் நம் மக்கள் தலைவரின் உண்மையான காவலர்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது, மீறிக் கலந்துகொள்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ரஜினி மக்கள் மன்றத்தின் தென்சென்னை மேற்கு மாவட்டத்தின் செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், "தலைவர் ரஜினிகாந்த் தனது உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு தேர்தல் அரசியலுக்கு தற்பொழுது வரவில்லை என்ற அறிக்கையைக் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். அவரது அறிக்கையைத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சில ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வரும் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அறவழிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அந்த அறவழிப் போராட்டத்திற்கு நமது தலைமை மன்றம் அதிகாரபூர்வ அனுமதி அளிக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தென்சென்னை மேற்கு மாவட்டத்தைச் சார்ந்த எந்த நிர்வாகியும் அந்த அறவழிப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த முறை நடந்த அனைத்து மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் ரஜினிகாந்த் அவரது உடல்நிலை குறித்து விரிவாக அனைத்து மாவட்டச் செயலாளர்களிடம் விவரித்தார். அதனை ஏற்றுக்கொண்டு நமது தலைவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் மேலும் கட்டுப்பட்டு உடன் நிற்பதாகவும் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஒருமனதாக உறுதியளித்தனர்.
எனவே நாம் அனைவரும், தலைவரின் முடிவுக்குக் கட்டுப்பட்டு அவரிடமிருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை பொறுமை காக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT