Published : 05 Jan 2021 12:53 PM
Last Updated : 05 Jan 2021 12:53 PM
சென்னையில் அதிகாலை முதல் பெய்து வரும் திடீர் மழையாலும், சாலைகளில் வெள்ளம்போலத் தேங்கிய நீராலும் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. அதேபோல வட கிழக்குப் பருவமழை ஜனவரி 12-ம் தேதி வரை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (ஜன.5) அதிகாலை முதல் சென்னையில் திடீரெனத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆலந்தூர், மடிப்பாக்கம், வேளச்சேரி, நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், வில்லிவாக்கம், புழல், சென்ட்ரல், புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக புழல் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் 27 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 22 மி.மீ., மீனம்பாக்கத்தில் 16 மி.மீ. மழை பெய்துள்ளது.
சாலைகளில் தேங்கிய மழை நீர்
தொடர் மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் வெள்ளம் போலத் தேங்கியது. சைதாப்பேட்டை பஜார் சாலை, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை, புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியது.
புதுப்பேட்டையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலை நீடிப்பதாக அப்பகுதி குடியிருப்புவாசி வேதனையுடன் தெரிவித்தார். ஒரு மணி நேரம் மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி விடுவதாகவும் மக்கள் கூறினர்.
சாலைகளில் தேங்கிய மழை நீரால் காலையில் பணிக்குச் செல்வோரும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். அதேபோல போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT