Published : 05 Jan 2021 08:22 AM
Last Updated : 05 Jan 2021 08:22 AM
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் டிச.14-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பகல்பத்து திருநாள் நடைபெற்று, டிச.25-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், ராப்பத்து திருநாள் தொடங்கி, நேற்று முன்தினம் தீர்த்தவாரி நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதசி விழாவின் நிறைவு நிகழ்ச்சியான நம்மாழ்வார் மோட்சம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு வெள்ளிசம்பா அமுது செய்ய திரையிடப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு நம்மாழ்வார் மோட்சம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணி முதல் 9 மணி வரையில் உற்சவர் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அதன்பின், காலை 9.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, 10.30 மணிக்கு படிப்பு கண்டருளி ஆழ்வார், ஆச்சார்யார் மரியாதையாகி மூலஸ்தானம் சென்றடைந்தார்.
வைகுண்ட ஏகாதசி விழாவின் நிறைவாக இயற்பா சாற்றுமறையை முன்னிட்டு நேற்றிரவு 8.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து இயற்பா பிரபந்தம் தொடங்கியது. இரவு 9 மணி முதல் சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை தொடங்கி இன்று (ஜன.5) அதிகாலை 2 மணி வரை நடைபெறும்.
தொடர்ந்து அதிகாலை 2 மணி முதல் திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையில் சாற்றுமறையும் நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT