Published : 05 Jan 2021 08:27 AM
Last Updated : 05 Jan 2021 08:27 AM

டெல்லி அரசு சார்பில் தமிழ் அகாடமி அமைப்பு: டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர், தலைவர்கள் பாராட்டு

சென்னை

டெல்லி அரசு சார்பில் தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளதற்காக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வர் பழனிசாமி: தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்துள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: டெல்லி மாநில அரசு தமிழ் அகாடமி அமைத்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். பரஸ்பர கலாச்சாரத் தொடர்புகளை வளர்க்கவும், தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்தவும் இது உதவும். இதை முன்னெடுத்திருக்கும் டெல்லி முதல்வர், துணை முதல்வருக்கு திமுக சார்பில் பாராட்டுகள், வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: டெல்லி அரசு தமிழ் அகாடமி அமைத்திருப்பது தமிழ் மொழிக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும், தமிழ் மக்களுக்கும் மென்மேலும் பெருமை சேர்க்கும். தமிழ் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை டெல்லிவாழ் மக்கள் தெரிந்து கொள்வதோடு, அங்குள்ள தமிழ் மக்கள் உற்சாகம் அடைந்து ஊக்கத்துடன் செயல்படுவார்கள்.

டெல்லியில் ஏராளமான தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வருவதும், தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக செயல்பட்டு வருவதும் இத்தருணத்தில் தமிழ் அகாடமி அமைய பேருதவியாக அமைந்திருக்கிறது.
தமிழ் மொழிக்கு டெல்லியில் முக்கியத்துவம் கொடுக்க முன்வந்திருக்கும் டெல்லி அரசுக்கு தமாகா சார்பில் பாராட்டுகள், வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x