Published : 05 Jan 2021 08:24 AM
Last Updated : 05 Jan 2021 08:24 AM

அரசாணையை எதிர்த்து திமுக முன்னாள் எம்எல்ஏ வழக்கு; அரசியல் சண்டைகள் நீதிமன்றம் வருவது ஏன்?- சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கேள்வி 

சென்னை 

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் போன்ற பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்த பொதுத்துறை செயலரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, இதுபோன்ற அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஏன் என கேள்வி எழுப்பி, இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 1988-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தில் 2018-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில், பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்த தகுதியான உயரதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சட்டத்தின் கீழ் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் குறித்து விசாரிக்க பொதுத்துறை செயலரின் ஒப்புதல் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை எதிர்த்து திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக தானும், பிற திமுக நிர்வாகிகளும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், பொதுத்துறைச் செயலரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநருக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ளது. அப்படியிருக்கும்போது பொதுத்துறை செயலரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும்.

பொதுத்துறை செயலர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பவர் என்பதால் அவரால் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக செயல்பட முடியாது. எனவே முதல்வர், அமைச்சர்கள் போன்ற பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்களை ஆளுநருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றால் போதும் என உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது தலைமை நீதிபதி, இதுபோன்ற அரசியல் சண்டைகளை நீதி
மன்றத்துக்கு கொண்டு வருவது ஏன் என்றும், அரசியல் களத்தில் சந்திக்க வேண்டியதுதானே என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனுதாரர் தரப்பில், அரசாணையின் செல்லுபடியாகும் தன்மை குறித்தே இந்த வழக்குதொடரப்பட்டுள்ளது, என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x