Published : 05 Jan 2021 08:20 AM
Last Updated : 05 Jan 2021 08:20 AM

2 கட்ட தேர்தல் குறித்து முடிவு எடுக்கவில்லை; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

சென்னை 

சட்டப்பேரவை பொதுத் தேர்தலை 2 கட்டமாக நடத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நடக்க உள்ளது. இதற்கான அடிப்படை பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கரோனா தடுப்பு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படுவதால், கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைத்தல், அதற்கான இடங்களை தேர்வு செய்தல், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

தமிழகத்தை பொருத்தவரை, இதுவரை பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்
படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. வழக்கமாக மார்ச் மாதம் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். இதுவரை பள்ளிகள் திறக்கப்படாததால் தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. அதே நேரம், சட்டப்பேரவை பொதுத் தேர்தலும் வருவதால், தேர்தல் முடிந்த பிறகு பள்ளித் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிகிறது. சமீபத்தில் சென்னை வந்த உமேஷ் சின்கா தலைமையிலான தேர்தல் ஆணைய குழுவினரிடம் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கிடையில், கரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்ட
மிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் கேட்டபோது, ‘‘தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவது குறித்து நாங்கள் எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை. இதுவரை அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. திட்டமிட்டபடி வரும் ஜன.20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். கரோனா காரணமாக கூடுதலாக 30 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதால், தேர்தல் பணியில் கூடுதலாக 1 லட்சம் பேர் என, 4 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்’’ என்றார்.

பாதுகாப்பு கிடங்குகள்

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைக்க, 32 கிடங்குகள் கட்ட முடிவெடுக்கப்பட்டது. முதல்கட்டமாக சென்னை, மதுரை மாவட்டங்கள் தவிர மற்ற 30 மாவட்டங்களில் கிடங்குகள் கட்ட தமிழக அரசு ரூ.120.80 கோடி நிதி ஒதுக்கியது. அதன்பிறகு, சென்னைக்கு ரூ.7.16 கோடி, மதுரைக்கு ரூ.6.19 கோடி ஒதுக்கப்பட்டது.

தற்போது நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் சேமிப்புக் கிடங்குகள்
பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மற்ற 31 கிடங்குகளின் கட்டுமானப் பணிகள் மார்ச் இறுதிக்குள் முடிக்கப்படும். சென்னையில் கிடங்கு கட்டுவதற்கான பணி தொடங்கியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x