Published : 04 Jan 2021 09:40 PM
Last Updated : 04 Jan 2021 09:40 PM
துணிச்சலாக பிரச்சினைகளை எதிர்த்து நிற்க வேண்டும் என்று குட்டிக்கதை சொல்லி தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியன் மணிமண்டபம் மற்றும் சிலை திறப்பு விழாவில் அவர் பேசியதாவது:
தேர்தல் ஆணையத்தின் மரியாதை சேஷனால் உயர்ந்ததுபோல் சட்டப் பேரவை தலைவரின் வானளாவிய அதிகாரத்தை பி.எச். பாண்டியனால் மக்கள் தெரிந்து கொண்டனர். கட்சி, ஆட்சி மற்றும் சமூகப் பணியில் உத்வேகத்துடன் செயல்பட்டவர். திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி பச்சையாறு திட்டம், கொடுமுடியாறு திட்டம் போன்றவற்றுக்கு நீதிமன்றத்தில் வாதிட்டு அனுமதி பெற்றுத்தந்தார்.
ரூ.50 லட்சம் மதிப்பிலான 5 ஏக்கர் நிலத்தை மனோன்மணியம் கல்லூரிக்காக வழங்கினார். திருநெல்வேலி மண்ணுக்கான வீரம் மற்றும் அன்பு அவரிடம் இருந்தது. அசாத்திய துணிச்சலுடன் அவர் செயல்பட்டார். அவரைப்போல் துணிச்சலுடன் செயல்பட வேண்டும்.
குட்டிக்கதை
விவேகானந்தர் காசி துர்க்கை கோயிலில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குரங்குகள் கூட்டம் ஒன்று கூச்சலிட்டுக்கொண்டு அவரை சூழ்ந்து கொண்டது. சில குரங்குகள் அவர் மீது பாய்ந்து பிராாண்டின. அவரது உடைகளையும் இழுத்தன. இதனால் பயந்துபோன விவேகானந்தர் குருங்குகளிடம் இருந்து தப்பித்து ஓடினார். அப்போது அங்கிருந்த சந்நியாசி ஒருவர் அதை பார்த்து, விவேகானந்தரிடம், குரங்குகளை எதிர்த்து நில் என்று கூறினார். இதையடுத்து துணிச்சலுடன் குருங்குகளை விவேகானந்தர் எதிர்கொண்டார். அவரது கம்பீரமான தோற்றத்தை பார்த்த குரங்குகள் தப்பித்தால்போதும் என்று பின்வாங்கிச் சென்றன. இந்த கதையை அமெரிக்காவில் தனது சொற்பொழிவின்போது விவேகானந்தர் சுட்டிக்காட்டி பேசினார். அவரைப்போல் தைரியமாகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். துணிச்சலோடு இருந்தால் பிரச்சினைகள் விலகி ஓடும். கோழைகள் ஒருபோதும் வெற்றிபெற்றதில்லை என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT