Published : 04 Jan 2021 07:30 PM
Last Updated : 04 Jan 2021 07:30 PM
சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் அரிசி, சர்க்கரை எடைகுறைவாக இருந்ததாக குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவித்தனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி டிச.21-ம் தேதி தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் இன்று முதல் அனைத்து ரேஷன்கடைகளிலும் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு கார்டுக்கும் ரூ.2,500 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகியவற்றை துணிப்பையில் வைத்து கொடுக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சம் ரேஷன்கார்டுகளுக்கு வழங்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு காலையில் 100 பேர், மாலையில் 100 பேர் என 200 பேருக்கு டோக்கன் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.
காலை 9 முதல் மதியம் 1.30 மணி வரை, மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தநிலையிலும், காரைக்குடி பகுதி ரேஷன்கடைகளில்இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே கார்டுதாரர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
மேலும் பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றின் எடை குறைவாக இருந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கார்டுதாரர்கள் கூறியதாவது: அதிகாலையில் காத்திருந்து பொருட்களை வாங்கினோம. ஆனால் பச்சரிசி, சர்க்கரை தலா முக்கால் கிலோ மட்டுமே இருந்தது.
இதுகுறித்து கேட்டதற்கு பொங்கல் பொருட்கள் பேக்கிங் மற்றும் விநியோகத்திற்கு கூடுதலாக ஊழியர்களை நியமித்துள்ளோம். அவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக குறைத்து வழங்குவதாகக் கூறுகின்றனர், என்று கூறினர்.
இதுகுறித்து கூட்டுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கூடுதல் ஊழியர்களுக்கு அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஊதியம் கொடுக்க சொல்லியுள்ளோம். அதை காரணம்காட்டி பொருட்களின் எடையை குறைக்கக் கூடாது. புகார் வந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT