Published : 04 Jan 2021 07:13 PM
Last Updated : 04 Jan 2021 07:13 PM

பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள்; ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை

பொது ஊழியர்கள் மீதான புகாருக்கு அதிகாரிகள் ஒப்புதல் பெறும் 2018-ம் ஆண்டு திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை நீக்கக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 1988-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தில் 2018-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில், பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்தத் தகுதியான அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் குறித்து விசாரிக்க பொதுத்துறைச் செயலாளர் ஒப்புதல் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகத் தானும், திமுக நிர்வாகிகளும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்குப் புகார் அளித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், பொதுத்துறைச் செயலாளர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புகார்கள் குறித்து விசாரணை நடத்த, ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநருக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ள நிலையில், பொதுத்துறைச் செயலாளர் ஒப்புதல் பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும்.

பொதுத்துறைச் செயலாளர் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. அமைச்சரவை முடிவுக்கு அவர் கட்டுப்பட வேண்டும் என்பதால், அவர், முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரியாகக் கருத முடியாது. தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து, பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்களை ஆளுநருக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வழக்கில் மனுதாரர் சார்பாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிட்டார். ” மத்திய அரசு இயற்றியுள்ள ஊழல் தடுப்புச் சட்டம் 2018 -க்கு முரணாக தமிழ்நாடு அரசு இயற்றியுள்ள அரசாணை செல்லத்தக்கதல்ல. மத்திய அரசின் சட்டத்துக்கு எதிரானது. குற்றம் சுமத்தப்பட்டவர், தம் மீது கூறப்படும் ஊழல் புகார்களை தமிழ்நாடு அரசு அமைச்சரவைக்கு கீழ் பணியாற்றும் அரசு செயலாளர், மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்ய அனுமதி கொடுக்கும் அதிகாரத்தை அளிப்பது என்பது, குற்றவாளியே நீதிபதியாக செயல்படுவது போன்று சட்டவிரோதம் என்பதால் மேற்படி அரசாணைக்கு தடைவிதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

அதற்கு தலைமை நீதிபதி அமர்வு, “அரசியல் சம்பந்தப்பட்ட வழக்குகளை அரசியல் ரீதியாக அணுகாமல் எதற்கு உயர் நீதிமன்றத்துக்கு கொண்டு வருகிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “இது அரசியல் காழ்ப்புணர்சிக்காக தொடுக்கப்பட்ட வழக்கு அல்ல, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் எதிர்க்கட்சிகள், மக்கள் பிரதிநிதிகளாக சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும்கூட அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி, (watchdog) கண்காணிக்கும் செயலை செய்து மக்களாட்சி மாண்பிணைக்க காப்பதும் அவர்களது கடமைதான்” என்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி விவாதம் செய்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு மேற்படி மனுவை அனுமதித்து தமிழக அரசு இம்மனுவுக்கு ஆறு வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x