Published : 04 Jan 2021 04:52 PM
Last Updated : 04 Jan 2021 04:52 PM
நிகழாண்டு காரைக்காலில் இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கூறியுள்ளார்.
புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (ஜன.4) காரைக்காலில் நடைபெற்றது. அரசு செயலாளரும், அபிவிருத்தி ஆணையருமான அ.அன்பரசு தலைமை வகித்தார். வேளாண்துறை இயக்குநர் ஆர்.பாலகாந்தி (எ) சிவராமகிருஷ்ணன் வரவேற்றார்.
இதில் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, விவசாயிகளுக்குப் பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை, வேளாண் இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்குவதற்கான மானியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
"புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறைக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். காவிரி நீர் தொடர்பான நீண்ட சட்டப் போராட்டத்தில் காரைக்காலுக்கு 7 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடிக்கு காரைக்காலுக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பில் தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வர், தொடர்புடைய அதிகாரிகளின் செயல்பாட்டால் இது சாத்தியமானது.
வேளாண்துறை மூலம், விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையில் என்னென்னெ திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பது பல விவசாயிகளுக்குத் தெரியாத நிலை கடந்த காலங்களில் இருந்தது. ஆனால், தற்போது அப்படி இல்லை.
நம்மாழ்வார் விவசாயப் புனரமைப்பு திட்டம் என்ற திட்டம் கடந்த நிதியாண்டு அறிவிக்கப்பட்டது. பல நெருக்கடியான சூழலிலும், அறிவிக்கப்பட்ட ஆண்டிலேயே வேளாண்துறை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நெல், பருத்தி, பயறு என சாகுபடி செய்த விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ஊக்கத்தொகை கிடைக்கும். வேளாண்துறை மூலம் நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் அறிந்து, பயன்படுத்திக் கொண்டு விவசாயிகள் எல்லோரும் முன்னுக்கு வர வேண்டும்.
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 2018-19ஆம் ஆண்டுக்கான தொகை ரூ.3 கோடியே 30 லட்சம் ஒரு சில வாரங்களில் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரும்பு, நெல், பருத்தி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, காப்பீட்டுத் தொகை என இந்த மாதம் மட்டும் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை வேளாண்துறை அதிகாரிகளின் தொடர் முயற்சியால் கிடைக்கவுள்ளது.
கடந்த ஆண்டு இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ) மூலம் நெல் கொள்முதல் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, காலதாமதமானதால் விவசாயிகளுக்குப் பயனளிக்கவில்லை. நிகழாண்டு எஃப்.சி.ஐ மூலம் நெல் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன".
இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.
பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ரூ.2.43 கோடி மானியத்தொகை, வேளாண் இயந்திரமாக்கல் துணைத் திட்டங்களின் கீழ் ரூ.79 லட்சத்துக்கான பணி ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரிப் பேராசிரியர்கள், வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஆகியோர் விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.
இவ்விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, புதுச்சேரி கூடுதல் வேளாண் இயகுநர்கள் ஜெய்சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் ஜெ.செந்தில்குமார் நன்றி கூறினார்.
முன்னதாக, காரைக்கால் விற்பனைக் குழு வளாகத்தில், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான, தொழில்நுட்பக் கருவிகள் அடங்கிய புதிய அலுவலகப் பிரிவினை அமைச்சர் திறந்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT