Published : 04 Jan 2021 04:36 PM
Last Updated : 04 Jan 2021 04:36 PM
விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் பெறும் பொங்கல் பரிசுப் பணம் ரூ.2,500-ஐ வலுக்கட்டாயமாகப் பெறும் வேளாண்மைத் துறையினர், கிசான் சம்மன் திட்ட மோசடியில் பெற்ற பணத்தை வசூலிப்பதாக வரவு வைக்கின்றனர் என்று புகார் எழுந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500 வீதம் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லூர், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூர் என 9 தாலுக்காக்களில் உள்ள 932 கிராமங்களில் 1,254 நியாயவிலைக் கடைகள் மூலம் 5 லட்சத்து 86 ஆயிரத்து 97 குடும்ப அட்டைகளுக்கு மொத்தம் ரூ.2,500 வீதம் ரூ.146 கோடியே 52 லட்சத்து 42 ஆயிரத்து 500 பொங்கல் பரிசு வழங்கும்பணி தொடங்கியுள்ளது.
மாவட்டம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் அதிமுகவினர் குவிந்து பொங்கல் பரிசுகளைக் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகின்றனர். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே கிசான் சம்மன் நிதி மோசடியில் தொடர்புடைய குடும்ப அட்டைதாரர்கள் பெறும் ரூ.2,500-ஐ வேளாண்மைத் துறையினர் வலுக்கட்டாயமாகப் பெற்று, அவர்கள் கிசான் திட்ட மோசடியாகப் பெற்ற தொகையாக வரவு வைப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
இதகுறித்து, திருக்கோவிலூர் திமுக எம்எல்ஏ பொன்முடி செய்தியாளர்களிடம் கூறுகையில், "பொங்கல் பரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒழுங்காகச் சென்று சேரவில்லை. வேளாண்மைத் துறையினர் இதைப் பறிப்பது நியாயமல்ல. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொங்கல் பரிசுத் தொகை வேறு. கிசான் சம்மன் திட்ட மோசடியில் பெற்ற பணத்தை வசூலிப்பது வேறு. மாவட்டம் முழுவதும் இப்புகார் வருகிறது.
அரசின் திட்டங்களை ஆளும்கட்சியினர் கொடுக்கக் கூடாது என்பது அதிமுகவினருக்கும் தெரியும். ஆனால், தேர்தலை மனதில் வைத்துச் செயல்படுகிறார்கள். இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, நியாயவிலைக் கடைக்காரர்கள் கொடுக்கவும், ஆளும் கட்சியினரை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT