Last Updated : 04 Jan, 2021 01:44 PM

2  

Published : 04 Jan 2021 01:44 PM
Last Updated : 04 Jan 2021 01:44 PM

தொழில் வளர்ச்சி, அந்நிய முதலீடுகள், வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை: முதல்வர் பழனிசாமிக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

தொழில் வளர்ச்சி, அந்நிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜன.04) வெளியிட்ட அறிக்கை:

"இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியிலும், அந்நிய முதலீடுகள் பெறுவதிலும் தமிழகம் முதன்மை இடத்தில் இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி சாதனையாகக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், தமிழகத்தின் கள நிலவரத்தை ஆய்வு செய்தால் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் தான் ஏற்படுகிறது. அதற்குப் பல உதாரணங்களைச் சான்றாகக் கூறமுடியும்.

நேற்று துணை ஆட்சியர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 66 பதவிகளுக்கான குரூப் - 1 முதல்நிலை தேர்வுக்கு 2 லட்சத்து 56 ஆயிரத்து 954 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், 1 லட்சத்து 31 ஆயிரத்து 264 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 51.08 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 1 லட்சத்து 25 ஆயிரத்து 690 பேர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாமல் தேர்வு எழுத வரவில்லை. இதன்படி 66 பதவிகளுக்கு 1.31 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதனால் ஒரு பதவிக்கு 1,989 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதைவிடத் தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை உறுதி செய்வதற்கு வேறு புள்ளி விவரம் தேவையில்லை.

கடந்த செப்டம்பர் மாதத்தில் தலைமைச் செயலகத்திற்குத் தேவைப்பட்ட 14 துப்புரவுப் பணியாளர் பணியிடங்களுக்கு 4,000 பேர் விண்ணப்பித்தனர். இதில் பங்கேற்றவர்களில் பலர் பொறியியல் பட்டதாரிகள், எம்பிஏ படித்தவர்கள் என, ரூ.15 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை கேட்டு விண்ணப்பித்த அவலம் நடைபெற்றதை ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதேபோல, கோவை மாநகராட்சியில் 549 கிரேட் - 1 சுகாதாரப் பணியாளர் பணியிடங்களுக்கு 7,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர் பணியிடங்களுக்கு, படித்த தொழில்நுட்பப் பட்டதாரிகள் வேலை கேட்கிற அவலநிலை தமிழகத்தில் இருப்பதை எடப்பாடி பழனிசாமி அறிவாரா ?

2015-16ஆம் ஆண்டுக்கான தேசிய வேலைவாய்ப்புக்கான தகுதி அறிக்கையில், தமிழகத்தில் படித்த பட்டதாரிகளில் வேலைவாய்ப்புக்குத் தகுதியுள்ளவர்கள் 25 சதவிகிதத்தினர் மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கல்லூரிகளில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் படித்து வெளியே வருகிறார்கள். அதேபோல, பொறியியல் கல்லூரிகளில் பட்டதாரிகளாக வெளியே வருகிறார்கள். இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு உரிய தொழில் வளர்ச்சி தமிழகத்தில் ஏற்படவில்லை என்பதை மூடி மறைப்பதற்குத்தான் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூபாய் 3 லட்சம் கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை அடுக்கிக் கொண்டே போகிறார்.

ஆனால், தேசிய வேலைவாய்ப்பு புள்ளிவிவரம், இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 7.6 சதவிகிதம் வேலை வாய்ப்பின்மை இருப்பதாக கூறுகிறது. இது தேசிய சராசரியான 6.1 சதவிகிதத்தை விட அதிகம். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலை வாய்ப்பின்மை 1.4 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இது மற்ற மாநிலங்களை ஒப்பிடுகிறபோது பன்மடங்கு அதிகம்.

தமிழகத்தின் தொழில் கொள்கை சரியான முறையில் வகுக்கப்படாததால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நலிந்து போயிருக்கின்றன. திருப்பூர், கோவை, கரூர் போன்ற பகுதிகளில் கடுமையான தேக்கநிலை ஏற்பட்டு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கரூர் மாவட்டம் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு உலக அளவில் பெயர் பெற்று விளங்கியது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் சுமார் ரூபாய் 3,000 கோடி வருமானம் கிடைத்து வந்தது. வேலைவாய்ப்பு பெருகியிருந்தது. ஆனால், சமீபகாலமாக தொழிலில் மந்தநிலை ஏற்பட்டு கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதையெல்லாம் தமிழக ஆட்சியாளர்கள் சீர்செய்வதற்கு எந்தவிதமான அணுகுமுறையையும் இதுவரை கையாளவில்லை.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லாத காரணத்தால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதற்கு தமிழக அரசின் வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தின் புள்ளி விவரங்களே சான்றாக உள்ளன. கடந்த ஜூலை 31 நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டுக் காத்திருப்போர் 66.31 லட்சம் பேர். இதில் பொறியியல் பட்டதாரிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கின்றனர். வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தால் தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தில் நிலவிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை மூடிமறைத்துவிட்டு, இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகத் தமிழகம் திகழ்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுவதை, நாளேடுகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் வெளியிடுவதைவிட ஏமாற்று வேலை வேறு என்ன இருக்க முடியும் ?

தொழில் வளர்ச்சி, அந்நிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அத்தகைய அறிக்கையின் மூலமே தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் உண்மை நிலையையும் அனைவரும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், அதைச் செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு தயாராக இல்லை.

எனவே, தொழில் வளர்ச்சி குன்றி, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதை எதிர்கொள்வதற்கு உரிய நிர்வாகத் திறமையோ, தொலைநோக்குப் பார்வையோ, தொழில் வளர்ச்சிக்கான அணுகுமுறையோ இல்லாத எடப்பாடி பழனிசாமி ஆட்சியை வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அகற்றுவதன் மூலமே, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என்பதை உறுதியாகக் கூற விரும்புகிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x