Published : 04 Jan 2021 01:02 PM
Last Updated : 04 Jan 2021 01:02 PM

ஓசூர் வனக்கோட்டத்தில் இரு குழுக்களாக 120 யானைகள் முகாம்: கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஓசூர் வனச்சரகம் சானமாவு காப்புக்காடு அருகே கடந்து செல்லும் 60 யானைகள் கூட்டம்

ஓசூர்

ஓசூர் வனச்சரகம் சானமாவு காப்புக்கட்டில் கடந்த 10 நாட்களுக்குள் இரண்டாவது முறையாக 60 யானைகள் முகாமிட்டுள்ளன. அதேபோல தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திலும் 10 குட்டி யானைகள் உட்பட 60 யானைகள் என ஓசூர் வனக்கோட்டத்தில் மொத்தம் 120 யானைகள் முகாமிட்டுள்ளன.

இந்த இரண்டு வனச்சரகங்களிலும் மாவட்ட வனத்துறை சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைத்து கண்காணிப்புப் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், வனத்தைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 27-ம் தேதியன்று ஓசூர் வனச்சரகம் சானமாவு காப்புக்காட்டில் முகாமிட்டிருந்த 10 குட்டியானைகள் உட்பட 60 யானைகள், அடுத்த நாள் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு இடம் பெயர்ந்தன. தற்போது சானமாவு காப்புக்காட்டில் மீண்டும் 60 யானைகள் நேற்று முதல் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளின் கூட்டத்தை ஜவளகிரி வனச்சரகக் காப்புக் காட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து ஓசூர் வனச்சரகர் ரவி கூறும்போது, ஓசூர் வனச்சரகம் சானமாவு காப்புக்காட்டில் இரண்டாவது முறையாக 60 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளின் கண்காணிப்புப் பணிக்காக மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில் 50 பேர் இடம் பெற்ற 7 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதவி வனப் பாதுகாவலர் கார்த்திகேயினி தலைமையில் ஒரு குழுவும், ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையில் ஒரு குழுவும், வனக்காப்பாளர்கள், சக்திவேல் மற்றும் நரசிம்மன் ஆகியோர் தலைமையில் 2 குழுவும், வனவர்கள் தலைமையில் 3 குழுக்களும் என மொத்தம் 7 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, காப்புக் காட்டில் இருந்து யானைகளின் கூட்டம் வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓசூர் வனச்சரகத்தில் மீண்டும் 60 யானைகளின் கூட்டம் முகாமிட்டுள்ளது குறித்து வனத்தை ஒட்டியுள்ள சானமாவு, பீர்ஜேபள்ளி, பாத்தக்கோட்டா உட்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சூளகிரி அருகே ஓர் ஒற்றை ஆண் யானை சுற்றி வருகிறது. இந்த யானை குறித்த கண்காணிப்புப் பணியில் வனவர் தவமுருகன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், காப்புக்காட்டை ஒட்டிய பகுதிகளில் கால்நடை மேய்ச்சல், விறகு சேகரிப்பு, இரவு நேரக் காவல் பணி ஆகியவற்றில் ஈடுபடுவதைக் கிராம மக்கள் தவிர்க்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது என்று வனச்சரகர் ரவி தெரிவித்தார்.

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார் கூறும்போது, தேன்கனிக்கோட்டை நொகனூர் காப்புக்காட்டில் கடந்த ஒரு வார காலமாக 60 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளின் கண்காணிப்புப் பணியில் மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில் 25 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தாவரக்கரை, உச்சனப்பள்ளி ஆகிய கிராமங்களில் யானைகளால் கேழ்வரகு, காலிஃபிளவர் உள்ளிட்ட பயிர்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், உரிய இழப்பீடு கேட்டும் 6 விவசாயிகள் மனு அளித்துள்ளனர். அந்த வயல்களை அளந்து, மதிப்பீடு செய்யும் பணியில் வனத்துறைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x