Last Updated : 04 Jan, 2021 03:20 AM

 

Published : 04 Jan 2021 03:20 AM
Last Updated : 04 Jan 2021 03:20 AM

காஞ்சிபுரம் நகரில் மஞ்சள்நீர் கால்வாய் மூலம் நத்தப்பேட்டை ஏரியில் சேரும் பிளாஸ்டிக் கழிவு: கால்வாயில் வடிகட்டி அமைத்து அகற்ற விவசாயிகள் கோரிக்கை

திருக்காலிமேடு பகுதியில் மஞ்சள் நீர் கால்வாயில் வடிகட்டி அமைக்க விவசாயிகள் கோரும் இடத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்.

காஞ்சிபுரம்

மஞ்சள்நீர் கால்வாய் மூலம் நத்தப்பேட்டை ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேராமல் தடுக்க வடிகட்டி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒக்கப்பிறந்தான் குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீர், நகரத்தின் நடுவே உள்ள விவசாயிகளின் பாசனத் தேவையை பூர்த்தி செய்து, நத்தப்பேட்டை ஏரியை சென்றடையும் வகையில் மன்னர்கள் காலத்தில் கால்வாய் அமைக்கப்பட்டது. தற்போது ஒக்கப்பிறந்தான் குளமே ஆக்கிரமிப்புகளால் இல்லாமல் போய்விட்ட நிலையில், இந்த கால்வாய் நகரின் கழிவுநீரை வெளியேற்ற பயன்படுகிறது. அழுக்கான தண்ணீர் செல்வதால் இது தற்போது மஞ்சள்நீர் கால்வாய் என அழைக்கப்படுகிறது.

இக்கால்வாயில், குடியிருப்புகளின் கழிவுநீர், மழைநீர் வெளியேறி நத்தப்பேட்டை ஏரியை சென்றடைகிறது. இந்த கழிவுநீருடன் சேர்ந்து டன் கணக்கிலான பிளாஸ்டிக் கழிவுகளும் ஏரியில் கலந்து வருவதால் தண்ணீர் முற்றிலும் மாசமடைந்துள்ளது. இந்த பிளாஸ்டிக் கழிவுகள் பாசனக் கால்வாய் வழியாக விளை நிலங்களுக்கு தண்ணீருடன் வருகின்றன. இதனால், சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு விளை நிலங்கள் மலட்டு நிலமாக மாறும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், நத்தப்பேட்டை ஏரியின் உபரிநீர் வையாவூர், களியனூர், காரை, தென்னேரி உட்பட சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் 17 ஏரிகளுக்கு சென்று அந்த ஏரிகளும் மாசடைந்து வருகின்றன.

எனவே, மஞ்சள்நீர் கால்வாய் தண்ணீர் ஏரியில் கலக்கும் முகத்துவாரத்தில் வடிகட்டி அமைத்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு கூறும்போது, "குடிநீர் ஏரியாக விளங்கிய நத்தப்பேட்டை ஏரி கழிவுநீர் கலப்பதாலும், கரையில் செயல்படும் குப்பை கிடங்காலும் மாசடைந்துள்ளது. பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஏரி நீரில் பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்ந்து கலப்பதால் நீரின் அடர்த்தி அதிகரித்து மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால், ஏரியின் முகத்துவாரம், திருக்காலிமேடு பகுதியில் மஞ்சள்நீர் கால்வாயில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிளாஸ்டிக் கழிவு வடிகட்டியை அமைக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறும்போது, "மஞ்சள்நீர் கால்வாயை தற்போது நகராட்சிதான் பராமரித்து வருகிறது. கால்வாய் பராமரிப்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவு அகற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.10 கோடிக்கான திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு ஒப்புதலுக்கு பிறகு பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x