Last Updated : 05 Oct, 2015 12:50 PM

 

Published : 05 Oct 2015 12:50 PM
Last Updated : 05 Oct 2015 12:50 PM

கிருஷ்ணகிரியில் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் முகாம் துவங்கியது: 1380 பேர் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று (5ம் தேதி) முதல் வருகிற 10ம் தேதி வரை இந்திய ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, தருமபுரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 12 ஆயிரத்து 500 இளைஞர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களுக்கு அழைப்பு கடிதம் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது. அவ்வாறு அழைப்பு கடிதம் பெற்றவர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இந்த முகாமில் பங்கேற்க வரும் வெளி மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இலவசமாக தங்கி, முகாம் நடைபெறும் இடத்திற்கு சென்றுவர மாவட்ட நிர்வாகம் சார்பில் பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கிருஷ்ணகிரி நகரில் 10 திருமண மண்டபங்களில் இளைஞர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் முகாம் நடைபெறும் இடத்திலேயே குறைந்த விலையில் உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணிக்கு முகாம் துவங்கியது. இதில் மதுரை மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் 3 ஆயிரம் பேர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்காக இளைஞர்கள் முகாம் நடைபெறும்

மைதானத்திற்கு அதிகாலை முதலே 3 மணி முதல் 6 மணி வரை வந்தனர். அதன்படி 3 ஆயிரம் பேர் அழைப்பு விடுக்கப்பட்டதில் 1380 பேர் மட்டுமே இந்த முகாமில் பங்கேற்க வந்திருந்தனர்.

அவ்வாறு பங்கேற்க வந்த 1380 பேருக்கும் முதலில் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது. அதன் ஒரு குழுவிற்கு 200 பேர் விதமாக ஓட்டப் போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. அதன்படி முதல் பிரிவில் 1.6 கி.மீ தூரத்தை 5.40 நிமிடங்களில் கடப்பவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதே போல் இரண்டாம் பிரிவில் 1.6 கி.மீ தூரத்தைத் 5.41 நிமிடம் முதல் 6 நிமிடம் வரை கடப்பவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தடை தாண்டும் ஓட்டம், புல்லப்ஸ், பேலன்ஸ் பாரில் நடப்பது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் உயரம், மார்பளவு, எடை போன்றவை கணக்கிடப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. பின்னர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்திய ராணுவத்தின் தமிழ்நாடு மாநில டிடிஜி பிரிகேடியர் சல்ராம்தால்வி மற்றும் பல்லாடா ஆகியோரது தலைமையில் ராணுவத்தினர் முன்னிலையில் நடந்து வருகிறது. பாதுகாப்பு பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று மாலை, முதல் நாள் முகாமில் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும் என கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள்

படைவீரர் நல துணை இயக்குநர் மணிவண்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x