திமுகவினரின் பொய் பிரச்சாரங்களை அதிமுகவினர் முறியடிக்க வேண்டும்: உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் வலியுறுத்தல்

திமுகவினரின் பொய் பிரச்சாரங்களை அதிமுகவினர் முறியடிக்க வேண்டும்: உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் வலியுறுத்தல்

Published on

திமுகவினரின் பொய் பிரச்சாரங்களை அதிமுகவினர் முறியடிக்க வேண்டும் என உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் கேட்டுக் கொண்டார்.

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எறையூர் கிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “தமிழகத்தில் 11 ஆண்டுகள் எம்ஜிஆரும், 16 ஆண்டுகள் ஜெயலலிதாவும், 4 ஆண்டுகள் பழனிசாமியும் என 31 ஆண்டுகள் அதிமுக ஆட்சி செய்துள்ளது. கடந்த 2011-ல் ஜெயலலிதா கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார். அதனால், 2016-ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்றது. அதேபோல், 2016-ல் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை முதல்வர் பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.

பொய் பிரச்சாரங்களை கூறி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதேபோல், சட்டப் பேரவைத் தேர்தலிலும் பொய்யான வாக்குறுதிகளை கூறி திமுகவினர் வாக்குகளை கேட்பார்கள். அவர்கள் தரும் வாக்குறுதிகள், பொய்யானது என மக்களிடம் அதிமுகவினர் எடுத்துக் கூற வேண்டும். திமுகவினரின் தொடர் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனுக்காக பல்வேறு புரட்சிகளை செய்து வரும் முதல்வர் பழனிசாமியை தொடர்ந்து முதல்வராக செயல்பட நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in