Published : 03 Jan 2021 03:13 PM
Last Updated : 03 Jan 2021 03:13 PM
சென்னையில் மொத்த தொற்று ஏற்படும் இடங்களாக மாறிய ஐஐடியைத் தொடர்ந்து கிண்டி நட்சத்திர ஹோட்டலில் மொத்தமாக நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் மீண்டும் ஆர்.ஏ.புரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலிலும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து நட்சத்திர ஹோட்டல் ஊழியர்களையும் பரிசோதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு நாளொன்றுக்கு தொற்று பாதிப்பு 245 என்கிற அளவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்பது முழுமையாக இல்லாவிட்டாலும் சற்று கூடுதலாக உள்ளது.
இந்நிலையில் முகக்கவசம், தனி மனித இடைவெளி, கைகளை கழுவுதல் போன்ற எச்சரிக்கைகள் மீறப்படும்போது கரோனா தொற்று மீண்டும் பரவும் என்பதற்கு ஐஐடி மாணவர்கள் மெஸ் ஊழியர்களுக்கு ஏற்பட்ட தொற்று நிரூபித்தது. அதேப்போன்று கிண்டி ஐடிசி சோழா ஓட்டலில் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் ஓட்டலில் பொது நிகழ்ச்சிகள் நடத்த சென்னை மாநகராட்சி தடை விதித்தது.
இந்நிலையில் ஆர்.ஏ.புரத்தில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 20 ஊழியர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதேப்போன்று மற்றொரு ஹோட்டலில் நடத்தப்பட்ட சோதனையில் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இன்னும் முடிவுகள் வரவேண்டியுள்ளது.
இந்நிலையில் அனைத்து நடசத்திர ஹோட்டல்களிலும் அதைத்தொடர்ந்து சாச்சுரேஷன் டெஸ்டையும் நடத்த சென்னை மாநகராட்சியும், பொது சுகாதாரத்துறையும் முடிவெடுத்துள்ளது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கடைபிடிக்காத ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறைச் செயலர் அளித்த பேட்டி வருமாறு:
“நட்சத்திர விடுதிகளில் கரோனா தொற்று பரவுவது குறித்து பீதியடைய வேண்டாம். இது 15 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவு. ஏற்கெனவே ஒரு நட்சத்திர விடுதியில் 607 ஊழியர்களுக்கு மேல் எடுக்கப்பட்டதில் 97 பேருக்கு தொற்று வந்திருந்தது. மற்ற ஒரு நட்சத்திர ஹோட்டலில் 232 பேருக்கு எடுக்கப்பட்டதில் இன்றைய தினம் 20 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மற்றொரு ஹோட்டலில் 85 பேருக்கு எடுக்கும்போது ஒரே ஒருவருக்கு உறுதியானது.
இதை எச்சரிக்கையான ஒன்று அல்லது மொத்த தொற்று என எடுத்துக்கொள்ள முடியாது. அதே நேரம் முதல்வர் சில உத்தரவுகளை இந்த ஐஐடி நிகழ்வு உள்ளிட்ட நட்சத்திர விடுதிகள் நிகழ்வை வைத்து சாச்சுரேஷன் சோதனை என்று சொல்வார்கள் மேலோட்டமாக விட்டுவிடாமல் கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் தவிர அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள், அவர்கள் வசிக்கும் பகுதி உட்பட தொடர்பில் உள்ளவர்களை சோதித்து பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துகிறோம். இதில் மாநகராட்சியும் பொது சுகாதாரத்துறையும் இணைந்து செயல்படுகிறது”.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT