Published : 03 Jan 2021 12:56 PM
Last Updated : 03 Jan 2021 12:56 PM
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுப்பணம் ரூ.2500 நாளை முதல் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் வீடுவீடாக வழங்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசாகக் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சார தொடக்க விழாவில் அறிவித்தார். ஜனவரி 4-ம் தேதி முதல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கும் என்று அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் 2.06 கோடிக்கும் மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கம் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், 2021-ம் ஆண்டில் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி டிச.19ஆம் தேதி அறிவித்தார்.
இதுதவிர பச்சரிசி, சர்க்கரை 1 கிலோ, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றுடன் துண்டுக் கரும்புக்குப் பதில் முழுக் கரும்பு வழங்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார். இந்நிலையில் இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
அதன்படி, 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுடன், சர்க்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு மாற விண்ணப்பித்திருந்த 3,72,235 அட்டைதாரர்களில் மாற்றிக்கொண்டவர்களுக்கும் முகாம்களில் வசிக்கும் 18,923 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் சேர்த்து பொங்கல் பரிசை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக சுமார் 2.08 கோடி பேருக்கு ரூ.2,500 ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பும் கிடைக்கும்.
ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஜனவரி 4-ம் தேதி (நாளை) முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்க அந்தந்தத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக வீடுவீடாக டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. கார்டுதாரர்கள் விரல் ரேகை கட்டாயமில்லை எனவும் கார்டு மற்றும் டோக்கன் கொண்டுவந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றை முன்னிட்டு காலையில் ஒரு பேட்ச் மாலை ஒரு பேட்ச் என வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் குவியா வண்ணம் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. டோக்கன் பெற்றவர்கள் தங்களுக்கான தேதி, நேரம் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் கேட்டுத்தெரிந்து அன்று சென்று பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT