Published : 03 Jan 2021 09:28 AM
Last Updated : 03 Jan 2021 09:28 AM
ஜோதிடக் கணிப்பு மனித வாழ்வில் இன்றியமையாதாகி விட்டது; நாள், நட்சத்திரம் பார்த்து முக்கிய வேலைகளைத் தொடங்குவது வழக்கமான செயல்களில் ஒன்றாகி விட்டது. பிறந்தது முதல் இறப்பு வரை ஜாதக கணிப்புகளின் படியே வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
‘இவையெல்லாம் வெற்று வார்த்தை ஜாலங்கள்’ என்றும், ‘இவை வெற்றிக்கான பக்கத் துணை’ என்றும் ‘ஜோதிடம்’ குறித்த இருவேறுபட்ட கருத்து எப்போதும் உண்டு.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் கடந்த வாரம் வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிப் பெயர்ச்சி நடந்தது. ‘இந்தப் பெயர்ச்சி சாதகமா..! பாதகமா..!’ என்று அறியும் ஆர்வத்தில் பலரும் பல்வேறு ஊடகங்களை நாடினர்.
இந்த தருணத்தில் பண்ருட்டியை அடுத்த சன்னியாசிப் பேட்டை கிராமத்திற்கு ஆர்வத்தோடு பலர் சென்று வருவதை காண முடிந்தது.
சனிப்பெயர்ச்சிக்கும் சன்னியாசிப்பேட்டைக்கும் என்ன சம்பந்தம்?
இந்தக் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்டோர் தலைமுறை தலைமுறையாய் ஜோதிடக் கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். சன்னியாசிபேட்டைக்கு சற்றே அருகில் இருக்கிறது எழுமேடு கிராமம். இங்கும் 10 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஜோதிட தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களும் சன்னியாசிபேட்டையின் உறவுக் கூட்டங்களே..!
சன்னியாசிபேட்டையில் 60 வருடங்களாக ஜோதிடத் தொழிலில் ஈடுபட்டு வரும் பாலதண்டாயுதபாணி என்பவரின் வீட்டிற்கு சென்றோம். நாம் சென்ற நேரத்தில்15-க்கும் மேற்பட்டோர் தங்களின் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளுடன் அவர் வீட்டு வாசலில் காத்திருந்தனர்
அந்த பரபரப்பிற்கு நடுவே, பாலதண்டாயுதபாணியிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.
“என் பாட்டன், முப்பாட்டன் காலம் தொட்டு இதுதான் எங்க குடும்பத் தொழில்.. கடந்த 40 வருஷமா ஊர் ஊரா போய் தங்கி, கணிச்சி சொல்லிட்டு இருந்தேன். இப்ப ஊரோட ஒதுங்கிட்டேன்.
‘ஆன்லைன்’ல ஜாகதம் பாக்குற காலம் இது; ஆனாலும் சன்னியாசிப்பேட்டைக்குன்னு ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்யுது. அந்த மவுசும் ஆண்டவன் அருளும் எங்கள வாழ வைக்குது“ என்றவர், இடை இடையே இரு நபர்களுக்கு ஜாதக கட்டங்களை அலசி ஆராய்ந்து பலா பலன்களை கூறிக் கொண்டே நம்மிடம் பேச்சைத் தொடர்ந்தார்.
“அந்த காலத்திலேயே நடிகர் ரவிச்சந்திரனுக்கு ஜாதகம் கணித்து கொடுத்தேன். சரியா சொன்னதா சந்தோஷப்பட்டாரு. நம்ம மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத், அவரது அண்ணன் எம்.சி.தாமோதரன், புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி இப்படி பல முக்கிய பிரமுகர்களுக்கு உரிய பலா பலன்களை எடுத்துச் சொல்லியிருக்கேன்” என்று தனது தொழில் நேர்த்தியை எடுத்துச் சொன்னார்.
தனது குடும்பத்து பெண்களும் தன்னிடம் ஜோதிடம் கற்று, கணிக்கத் தொடங்கியிருப்பதைக் கூறி, சன்னியாசிபேட்டையின் பாரம்பரியத் தொழில் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுவதை மனநிறைவாக பகிர்ந்து கொண்டார்.
பாலதண்டயுதபாணி குடும்பத்தைப் போல சன்னியாசிபேட்டையிலும், எழுமேட்டிலும் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சர்வேஸ்வரன் அருளால் ஜாதகம் கணிப்பதையே தங்கள் குலத் தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT