Published : 03 Jan 2021 08:43 AM
Last Updated : 03 Jan 2021 08:43 AM
‘மாத்துவோம்.. எல்லாத்தையும் மாத்துவோம்..!’, ‘இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை!’ன்னு ‘பஞ்ச் டயலாக்’ பேசியவர் உடம்புக்கு முடியாததை காரணம் காட்டி ஒதுங்கி கொண்டார்.
நேர்மையோடும், நெஞ்சுரத்தோடும் காத்திருந்த அவரது ரசிகர்கள் இதனால் ரொம்பவே நொந்து போயிருக்கின்றனர்.
“தலைவரின் உடல் நலன் தான் முக்கியம்; அவரது முடிவை ஏற்கிறேன்” என்று ரசிகர்கள் கூறினாலும், அவர்களின் உள்ளக் குமுறலை உணர முடிகிறது.
அந்த குமுறலை பொது மக்களைக் காட்டிலும் கழகங்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றன. ஆதங்கத்தில் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ஆள் விட்டு பேசி வருகின்றனர். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ரத்தத்தின் ரத்தங்களும், கழக கண்மணிகளும். இந்த ஆள் சேர்ப்பு ஆராவாரத்தில் போட்டாப் போட்டி போட்டு வருகின்றன.
பண்ருட்டியில் இதற்கு முதல் பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றனர். பண்ருட்டியை அடுத்து அண்ணா கிராமம் ஒன்றியத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மாளிகைமேடு ஏழுமலை தலைமையில் அதே பகுதியைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சிவா, மன்ற தலைவர்கள் மணி, சத்யா, கோவிந்தராஜ் உள்ளிட்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் சுமார் 200 பேர் பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தலைமையில் அண்மையில் அதிமுகவில் இணைந்தனர்.
இன்னும், சில இடங்களில் விரக்தியில் இருப்பவர்களை தங்கள் பக்கம் இழுக்க திமுகவினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்தடுத்த வாரங்களில் அந்தக் கட்சியிலும் ஐக்கிய நிகழ்வு நடப்பதைக் காணலாம்.
இதற்கு மத்தியில் கடலூரில் சிலர், ‘வேல் வெற்றிவேல்’ என்ற கோஷத்தோடு ரஜினி ரசிகர் மன்றங்களை அணுகி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும், பேச வேண்டியதை சரியாக பேசிய பிறகே கைகோர்த்து களத்தில் இறங்க வேண்டும் என்பதில் மன்றத்தினர் கறாராக இருக்கின்றனராம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT