Published : 03 Jan 2021 08:41 AM
Last Updated : 03 Jan 2021 08:41 AM
நமது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் செஞ்சிக் கோட்டைக்கு எத்தனையோ முறை நாம் சென்று வந்திருப்போம். அந்த செஞ்சிக் கோட்டையின் ராஜா, `தேசிங்கு' என்று சொல்ல கேட்டிப்போம்.
அவரைப் பற்றி நம்மில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதோருக்காக அவரது கதை இதோ…
இந்தியாவின் தென்பகுதி வரை தங்களின் ஆட்சியை முகலாயர்கள் விரிவுபடுத்திய காலகட்டத்தில், அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் சொருப் சிங் என்ற ரஜபுத்திர வீரன். அதற்கு கைமாறாக, சொரூப் சிங்கை கி.பி 17-ம் நுாற்றாண்டில் செஞ்கியை ஆட்சி புரிய முகலாயர்கள் தேர்வு செய்தனர்.
இவரின் மகன் தேஜஸ் சிங் (தேசிங்கு ராஜா). சொரூப்சிங் தனது நண்பர் முகமதுகான் வைத்திருந்த நீலவேணி என்ற குதிரையை அடக்க டெல்லி சென்றார்.
அந்தக் குதிரையை அடக்க முடியாததை காரணம் காட்டி, அவர் சிறை வைக்கப்பட்டார். இதை அறிந்த தேசிங்கு டெல்லி சென்று, அக்குதிரையை தனது 15-வது வயதில் அடக்கினார்.
இதைக் கண்டு வியந்த டெல்லி பாதுஷா, தனது சேனைத் தலைவர் பீம்சிங்கின் மகள் ராணிபாய் என்ற பெண்ணை தேஜஸ் சிங்கிற்கு திருமணம் செய்து வைத்து, சொரூப் சிங்கை விடுவித்தார். கூடவே, அடக்கப்பட்ட நீலவேணி குதிரையையும் பரிசாக அளித்தார்.
சொரூப்சிங் இறக்கும் போது டெல்லி அரசுக்கு செலுத்த வேண்டிய 70 லட்ச ரூபாயை செலுத்தாததால் தேசிங்கு முடிசூட்டிக் கொள்வதை பாதுஷாவின் பிரதான தளபதி ஆற்காடு நவாப் எதிர்த்தார். தனது பரம்பரை உரிமையை விட்டுக் கொடுக்காத தேசிங்கு தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டார். அவரது தந்தையின் நண்பன் முகமது கான் அதற்கு ஆதரவாக நின்றார்.
இதனால், ஆற்காடு நவாப் சதயத் உல்லாகானுக்கும், ராஜா தேசிங்குவிற்கும் விரிசல் ஏற்பட்டது. கப்பத்தொகையை கேட்ட நவாப்பிடம், ‘கப்பம் செலுத்த முடியாது’ எனக் கூறியதால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.
முகமது கான் தனது திருமணத்திற்காக வழுதாவூர் சென்றிருந்தார். இந்த நேரத்தில் போர் தொடுத்தால் தேசிங்கு அடிபணிய வாய்ப்புண்டு என திட்டமிட்ட நவாப் போரை அறிவித்து, செஞ்சி கோட்டையை முற்றுகையிட்டார்.இதை அறிந்த முகமதுகான் தனது திருமணத்தை நிறுத்தி விட்டு, தேசிங்குவின் படை தளபதியாக போரிட்டு வென்று தனது படையுடன் திரும்பும் போது, மறைந்திருந்த ஒருவனால் குறுவாளால் குத்தி கொல்லப்பட்டார்.
இதை அறிந்த ராஜா தேசிங்கு தானே போர்களத்திற்கு வந்தார். அப்போது பீரங்கி குண்டுகள் பொழிய, நடந்த போரில் நீலவேணிக் குதிரை கால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டது.
தன்னை எப்படியும் சுட்டுக் கொன்று விடுவார்கள், என கருதிய ராஜா தேசிங்கு செஞ்சி அருகே கடலி கிராமத்தில் தன் வாளை வானத்தில் எறிந்து, மார்பைக் காட்டி வீர மரணம் அடைந்தார். அவரது மரணம் 3.10.1714 அன்று நடந்ததாக சொல்கிறது வரலாற்று ஆய்வேடு. அப்போது ராஜா தேசிங்குவிற்கு வயது 18. இதை அறிந்த ராணிபாய் உடன்கட்டை ஏறி விட்டார்.
வீர மரணம் அடைந்த ராஜா தேசிங்குவின் உடலை அப்படியே விட்டுவிட்டு செல்லாத ஆற்காடு நவாப் சதயத் உல்லாகான் செஞ்சிக்கு கொண்டு வந்து அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார்.
தேசிங்குவின் வழி வந்தவர்கள் இன்றைக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் பொந்தில் (ரஜபுத்) சமூகத்தினர் என்ற பெயருடன் வாழ்கின்றனர். அவர்கள் தேசிங்குவுக்கு சிலை எழுப்ப வேண்டும் என்றும் கோரிக்கையையும் வைத்து வருகின்றனர். அதை அண்மைகாலமாக பாஜகவினரும் முன்மொழிந்து வருகின்றனர்.
(செஞ்சிக் கோட்டையின் வரலாறு அடுத்த வாரத்தில்…)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT