Published : 02 Jan 2021 10:15 PM
Last Updated : 02 Jan 2021 10:15 PM
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத உச்சமாக, நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் மதுரை மல்லிகை இன்று ஒரு கிலோ ரூ.5000-க்கு விற்பனையானது.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை சுற்றுவட்டாரபகுதிகளில் அதிகளவில் பூ சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் பூக்களை திண்டுக்கல், நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு கொண்டுசென்று விற்பனை செய்கின்றனர்.
பனிக்காலம் தொடங்கியது முதல் செடியில் பூக்கும் பூக்கள் பனியால் அதிக ஈரமாகி செடியிலேயே அழுகிவிடுவதால் பூக்களை முழுமையாக பறிக்கமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பாதிப்பு காரணமாக பூ மார்கெட்டிற்கு குறைந்த அளவிலான பூக்களே விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. ஆனால் தேவை அதிகரிக்கும் நிலையில் பூக்களின் உயர்கிறது.
மார்கழி மாதம் தொடங்கியது முதலே பூக்களின் படிப்படியாக உயரத்தொடங்கியது.
கடந்தவாரம் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.3000 முதல் ரூ.4000 வரை விற்பனையானது. இந்தவிலை இன்று மேலும் உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.5000 எட்டியது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் உச்சவிலையாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
நாள் ஒன்றுக்கு 50 டன் மல்லிகை பூக்கள் வரத்து இருந்தநிலையில் தற்போது 50 கிலோ மல்லிகைப்பூ மட்டுமே விற்பனைக்கு வருகிறது. மூன்றாம்தர மல்லிகைப்பூக்கள் ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், இரண்டாம்தர மல்லிகைப்பூக்கள் ஒரு கிலோ ரூ.3000 முதல் ரூ.4000 வரையிலும் விற்பனையானது.
ஏற்றுமதி தரம் வாய்ந்த மல்லிகை இன்று ஒரு கிலோ ரூ.5000 க்கு விற்பனையானது. இதனால் பூ விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இதுதான் அதிகபட்சவிலை என்கின்றனர் வியாபாரிகள்.
மல்லிகை பூவை விலை அதிகம் கொடுத்து வாங்கமுடியாதவர்கள் மல்லிகை பூ போன்றே இருக்கும் ஆனால் வாசமில்லாத காக்கரட்டான் என்ற பூவை வாங்கிச்சென்றனர். காக்கரட்டான் ஒரு கிலோ ஆயிரத்திற்கு விற்பனையானது.
மல்லிகைக்கு மாற்றாக விற்பனையான வெள்ளைநிறத்தில் இருக்கும் முல்லைப்பூ ஒரு கிலோ ரூ.1100 க்கும், ஜாதிப்பூ ஒருகிலோ ரூ.800 க்கும் விற்பனையானது.
செவ்வந்தி, அரளிப்பூக்கள் ஒரு கிலோ தலா ரூ.100 க்கும், பன்னீர்ரோஸ் ஒரு கிலோ ரூ.80 க்கும் விற்பனையானது. பனிப்பொழிவு அதிகம் காரணமாக அனைத்து பூக்கள் வரத்தும் குறைந்தே காணப்பட்டது.
பொங்கல் பண்டிகை வருவதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். :::::
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT