Published : 02 Jan 2021 09:30 PM
Last Updated : 02 Jan 2021 09:30 PM
"மு.க.அழகிரி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்திற்கு திமுக குடும்பக் கட்சி என்று நினைப்போரும், திமுகவில் உள்ள பல விரக்தியாளர்களும் மட்டுமே பங்கு பெறுவர். எங்கள் கட்சியில் இருந்து ஒருவர் கூடச் செல்வதற்கு கடுகளவும் வாய்ப்பு இல்லை" என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சார்பாக தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது:
கரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வருகிற சூழ்நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மதுரை மாநகராட்சியின் சார்பாக எடுத்து வருகிறோம். அதனடிப்படையில், தூய்மைப் பணியாளர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கியுள்ளோம்.
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. தமிழக முதல்வர் என்ன வழிகாட்டுதல் சொல்லியுள்ளாரோ அதனடிப்படையில் பொங்கல் பரிசு வழங்குகிறோம். இதன் மூலம், 2 கோடியே 6 லட்சம் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு கிடைக்கும்.
கரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் சீனி கார்டு வைத்திருப்பவர்கள் கூட அரிசி கார்டாக மாற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களும் பொங்கல் பரிசு தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு உள்ளது
திமுகவில் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகையால் திமுகவில் அதிருப்தியில் உள்ளவர்கள் மட்டுமே மு.க.அழகிரி நாளை நடத்தும் ஆலோசனைக் கூட்டத்திற்குச் செல்வார்களே தவிர எங்கள் கட்சியில் இருந்து யாரும் செல்வதற்குக் கடுகளவும் வாய்ப்பு இல்லை.
எல்லாம் சரியாகிவிடும்; எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்வாரே தவிர கமலஹாசன் வேறொன்றும் செய்யவிடமாட்டார். ஆனால் அவர் திறமையான நடிகர் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.
திமுக தலைவர் ஸ்டாலின் தினந்தோறும் ஒரு கருத்தைச் சொல்லும் பட்சத்தில் மட்டும்தான் அது ஊடகங்களில் வரும் என நினைக்கிறார். பழைய தகவல்களை சொன்னால் ஊடகங்களில் வராது அல்லவா. அதனால் தினந்தோறும் ஒரு புதிய கருத்த்தைச் சொல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளார்.
அதிமுகவின் ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்துள்ளோம். விவசாயத்தில் பல்வேறு புரட்சிகளை செய்துள்ளோம்.
சினிமா நடிகரைப் போல முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பார்க்கக் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
கூட்டணி அமைத்த பிறகு மற்றொரு தேர்தல் பரப்புரையை எவ்வாறு கொண்டுபோவது என்று திட்டமிடுவோம்
இப்போதைக்கு எங்களது திட்டங்கள் மக்களுக்குச் சென்று சேர்ந்துள்ளதா என்பதைப் பார்க்கத்தான் தேர்தல் பரப்புரை செய்கிறோம்.
மதுரையில் கிராமங்களே இல்லை. ஆனால் கிராம சபைக் கூட்டம் நடத்துகிறது திமுக. கூட்டத்திற்கு வருவோர் ஒவ்வொருக்கும் 200 ரூபாய் 100 ரூபாய் வழங்கப்படுகிறது.
ஆனால் நாங்கள் அப்படி அல்ல. நாங்கள் செய்த சாதனைகளைச் சொல்லி மக்களைச் சந்திக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT