Published : 07 Oct 2015 10:23 AM
Last Updated : 07 Oct 2015 10:23 AM
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
பட்டாசு உற்பத்தியில் பெயர் பெற்ற ஊர் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். இப்பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற 178 பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. சென்னையில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்ற 152 பட்டாசு ஆலைகளும், நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்ற 437 பட்டாசு ஆலைகளும் என மொத்தம் 767 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.
அலுமினியம் பாஸ்பேட், வெடி உப்பு எனப்படும் பொட்டாஷியம் நைட்ரேட், பச்சை உப்பு எனப்படும் பெரியம் நைட்ரேட், சிவப்பு உப்பு எனப்படும் ஸ்ட்ராங்ஷியம் நைட்ரேட், அலுமினிய கம்பி, ஸ்பார்க்லர் ஆகிய ரசாயனக் கலவைகளைப் பயன்படுத்தி சப்தம் ஏற்படுத்தும் பட்டாசுகள், ஒளி ஏற்படுத்தும் பட்டாசுகள், இவையிரண்டும் இணைந்த வகை பட்டாசுகள் என 3 வகையிலான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் ஒவ்வொரு வகையிலும் சுமார் 200 முதல் 250 வகையிலான பட்டாசு ரகங்கள் சிவகாசியில் தயாரிக்கப்படுகின்றன.
தீபாவளி, தசரா பண்டிகைகளுக்காக மட்டுமே சீசன் தொழிலாக பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக ஆண்டு முழுவதும் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன.
இங்கு தற்போது தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு தயாரிப்பு பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் மத்தாப்பு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, விசில் போன்ற ஒலி எழுப்பும் பட்டாசு வகைகளும், வானில் சென்று வெடிக்கும்போது பல வண்ணங்களை உமிழ்ந்தபடி வெடித்துச் சிதறும் மணி மருந்து வைக்கப்பட்ட பட்டாசு வகைகளும் இந்த ஆண்டு தீபாவளிக்காக அதிகம் தயாரிக்கப்பட்டுள்ளன.
பல வண்ணங்களில் சிதறி வெடிக்கும் ஸ்பார்க் டூம், விசில் போன்ற ஒலி எழுப்பியவாறு மேலே சென்று வெடிக்கும் மினி சைரன் வெடி, ஒரே நேரத்தில் பல வண்ணங்களை உமிழும் பூச்சட்டி, வண்ண வண்ண புகைகளை உமிழும் ரெயின்போ ஸ்பார்ஸ் ஆகிய புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கிப்ட் பாக்ஸ் வெடிகளுக்கு இந்த ஆண்டு அட்டைப் பெட்டிகள் மட்டும் பயன்படுத்தாமல், பிளாஸ்டிக் கவரால் தயாரிக்கப்பட்ட சூட்கேஸ் வடிவில் வெடிகள் விற்பனைக்கு வந்துள்ளன.
சிவகாசி நகரில் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் விருதுநகர், சாத்தூர், திருவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை, ராஜபாளையம் சாலைகளிலும் 500-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பட்டாசு வாங்குவதற்காக வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் சிவகாசிக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
இதுகுறித்து பட்டாசு விற்பனையாளர் கணேஷ் கூறுகையில், கடந்த ஆண்டு சீனப் பட்டாசுகளின் இறக்குமதியால் சிவகாசி பட்டாசு விற்பனை குறைந்தது. தற்போது வெளியூர், வெளிமாநில வியாபாரிகள் வரத் தொடங்கியுள்ளதால் சிவகாசி பட்டாசுகள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. சப்தம் எழுப்பும் வெடிகளைவிட ஃபேன்ஸி ரக வெடிகளுக்கே அதிக வரவேற்பு உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT