Published : 02 Jan 2021 06:19 PM
Last Updated : 02 Jan 2021 06:19 PM
புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. இலவச பொங்கல் பொருட்களுக்குப் பதிலாக அதற்குரிய பணத்தை பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.
அதன்படி கடந்த ஆண்டு இலவச பொங்கல் பொருட்களுக்குப் பதிலாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.175 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு இலவச பொங்கல் பொருட்களுக்குப் பதிலாக ரூ.200 வழங்கப்பட உள்ளது. சுமார் 1.75 லட்சம் சிவப்பு அட்டைதாரர்களுக்குத் தலா ரூ.200 வீதம் ரூ.3.49 கோடி, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதற்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். இத்தகவலை ஆளுநர் கிரண்பேடி இன்று தனது வாட்ஸ்அப்பிலும் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே 3 மாத இலவச அரிசிக்குப் பதிலாக சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,900, மஞ்சள் அட்டை தாரர்களுக்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.54 கோடி வழங்க ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார்.
குடிமைப்பொருள் வழங்கல் துறை சிவப்பு அட்டைதாரர்களுக்குத் தலா ரூ.2,200 வீதம் வங்கி கணக்கில் செலுத்திவிட்டனர். மஞ்சள் கார்டுகளில் அரசு ஊழியர், வருமான வரி செலுத்துவோர், ஜிஎஸ்டி பயனாளிகள் ஆகியோரை நீக்கக் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மஞ்சள் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய ஆளுநர் கிரண்பேடி, வருமான வரி செலுத்துவோர், ஜிஎஸ்டி பயனாளிகள் ஆகியோர் பட்டியலை மத்திய அரசிடம் பெற்று 8 வாரத்திற்குள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கவும், உடனடியாக மஞ்சள் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் அலுவலகம் இன்று (ஜன 02) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’எதிர்வரும் 2021-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரியில் உள்ள சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, வெல்லம் அரை கிலோ, பாசிப்பருப்பு அரை கிலோ, முழு முந்திரிப் பருப்பு 25 கிராம், ஏலக்காய் 10 கிராம் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுப் பை புதுச்சேரி அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் முடிவின்படி இவற்றை பொருளாக வழங்க இயலாததால் அவற்றின் மதிப்புக்கு ஈடாக, சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ரூ.200 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான கோப்புக்கு முதல்வர் நாராயணசாமி ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.200 வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 893 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT