Published : 02 Jan 2021 03:15 PM
Last Updated : 02 Jan 2021 03:15 PM
தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகளை காங்கிரஸ் அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் பல தலைவர்களின் வாரிசுகளுக்கு கட்சியில் மாநில அளவிலான பதவி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸில் நீண்டகாலமாக மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் நியமனங்கள் நியமிக்கப்படாமல் காலியாக இருந்தது. இந்நிலையில் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் புதிய நிர்வாகிகளை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மாநில துணைத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், செயலாளர், நிர்வாக கமிட்டி, மாவட்டத்தலைவர்கள், மாவட்ட தேர்தல் கமிட்டி, தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் பரப்புரை குழு, பிரச்சாரக்குழு தலைவர், விளம்பரக்கமிட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு கமிட்டி, ஊடக ஒருங்கிணைப்பு கமிட்டி, தேர்தல் நிர்வாக கமிட்டி போன்ற பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தலைவர்கள் பலரின் வாரிசுகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. துணைத்தலைவர்களாக கோபண்ணா, நாசே ராமச்சந்திரன், ராமசுகந்தன், இரா.செழியன், எஸ்.எம்.இதாயத்துல்லா உட்பட 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுச் செயலாளர்களாக அருள் அன்பரசு, விஜய் வசந்த், கார்த்தி தங்கபாலு உள்ளிட்ட 57 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாளராக ரூபி.மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில செயலாளர்களாக 104 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, ப.சிதம்பரம், மாணிக்கம், செல்லக்குமார், கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், குமரிஆனந்தன், கிருஷ்ணசாமி, பிரபு, மணிசங்கர அய்யர், சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்ட 56 பேரை நிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
70 மாவட்ட கமிட்டிகளில் புதிதாக மாவட்ட தலைவர்கள் நியமனம், மாற்றப்பட்ட நிர்வாகிகள் என 32 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில தேர்தல் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி தலைமையில் 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரை குழு தலைவராக திருநாவுக்கரசர் தலைவராக கொண்டு 38 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
விளம்பரக்கமிட்டி தலைவராக கே.வி.தங்கபாலு தலைமையில் 31 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊடக பிரச்சார கமிட்டி தலைவராக கோபண்ணா தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் மேலாண்மை குழுவாக கே.ஆர்.ராமசாமி தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் மகன் விஜய் வசந்த், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா, கே.வி.தங்கபாலு மகன் கார்த்தி தங்கபாலு ஆகியோருக்கு மாநிலப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT