Published : 02 Jan 2021 01:19 PM
Last Updated : 02 Jan 2021 01:19 PM
சென்னை ஆயுதப்படையில் காவலர்களாக உள்ள கிரேட்-1 போலீஸார் 2200 பேரை சென்னை காவல்துறைக்கு நேரடியாக பணிமாற்றம் செய்ய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் காவல் நிலையங்கள் உள்ளிட்ட சென்னை காவல்துறையின் பல்வேறு பிரிவுகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
தமிழக காவல்துறை 4 பிரிவுகளாக இயங்குகிறது. சிறப்பு காவல்படை மூலம் பணிக்கு வருபவர்கள், நேரடி எஸ்.ஐ.ஆக பணிக்கு வருபவர்கள், குரூப்-1 தேர்வெழுதி பணிக்கு வருபவர்கள், ஐபிஎஸ் பாஸ் செய்து பணிக்கு வருபவர்கள் என காவல்துறையின் பல்வேறு நிலை காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை நியமனம் நடைபெறுகிறது. பதவி உயர்வு மூலம் வருவது தனி.
இதில் மேல்நிலையில் நேரடியாக குறுகிய காலங்கள் ஏஎஸ்பியாக பணி செய்து எஸ்பியாக பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் மத்திய தேர்வாணைய தேர்வு எழுதி பணிக்கு வருகிறார்கள். டிஎஸ்பி பதவிகளுக்கு குரூப்-1 மூலம் அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் மாநில தேர்வாணைய தேர்வு எழுதி வருவார்கள். உதவி ஆய்வாளர்கள் பணிக்காக நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்களும் மாநில தேர்வாணைய தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் ஆயுதப்படை பிரிவிலிருந்து வருவார்கள். இவர்கள் கேட்டகிரி 2 வகை என அழைக்கப்படுவார்கள்.
காவல் ஆளிநர்கள் எனப்படும் காவலர்கள் நேரடியாக ஸ்டேஷன் டூட்டிக்கோ மற்ற பணிகளுக்கோ வருவதில்லை. கிரேட்-2 காவல் தேர்வு என காவல் சீருடைப்பணியாளர் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசு அறிவித்து தேர்வு நடத்தும். இதில் சிறைத்துறை காவலர்கள், தீயணைப்புத்துறைக்கும் தனியாக ஆட்களை தேர்வு செய்வார்கள்.
இவ்வாறு தேர்வான இரண்டாம் நிலை காவலர்கள் பயிற்சிக்குப்பின் சிறப்பு காவல் படையில் இணைக்கப்படுவார்கள். சிறப்புக் காவற்படை காவலர்கள் ஆயுதப்படை காவலராக மாற்றப்படுவார்கள். சில நேரம் நேரடியாக ஆயுதப்படையில் இணைக்கப்படுவதும் உண்டு. இவர்கள் கேட்டகிரி-2 என அழைக்கப்படுவார்கள். சென்னை காவல்துறையில் ஓய்வுபெறுதல் காரணமாக காவலர்கள் எண்ணிக்கை குறையும்போது ஆயுதப்படையிலிருந்து காவலர்கள் இணைக்கப்படுவார்கள்.
ஆயுதப்படை, சிறப்புக்காவல்படை காவலர்கள் பணி காவல்துறையில் கலவரப்பகுதியில் போலீஸாருக்கு உதவுவது, பாதுகாப்புப்பணி, விஐபிக்கள் பாதுகாப்பு, ஓட்டுநர் பணி போன்றவை ஆகும். இதுத்தவிர அவ்வப்போது வரும் தேவையைப் பொறுத்து சட்டம் ஒழுங்குக்கு ஆயுதப்படையிலிருந்து மொத்தமாக காவலர்கள் இணைக்கப்படுவார்கள். இதன்மூலம் இவர்கள் கேட்டகிரி-1 காவலர்கள் என அழைக்கப்படுவார்கள்.
சமீப காலமாக கடந்த ஆண்டு கண்க்கின்படி சென்னை காவல்துறையில் முக்கியமாக காவல் நிலையங்கள், போக்குவரத்து காவல் பிரிவில் அதிக அளவில் காவல்ர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கணக்கின்படி சென்னை காவல் துறையில் மொத்த எண்ணிக்கையான 25000 காவலர்கள் எண்ணிக்கையில் சுமார் 4000 காவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக காவல்துறை வட்டார தகவலாக உள்ளது.
இந்த ஆண்டு காவல்துறைக்கு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிதாக 10,906 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிறப்புக் காவற்படையிலிருந்து 2200 காவலர்கள் ஆயுதப்படைக்கு பணியிட மாறுதல் மூலம் வருகிறார்கள். ஆயுதப்படைக்கு நேரடியாக 2000 பெண் காவலர்கள் இணைக்கப்படுகின்றனர்.
இதையடுத்து சென்னை காவல்துறையின் காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஆயுதப்படையிலிருந்து 2200 காவலர்களை இணைக்க காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட துணை ஆணையர்கள் அவர்களை விடுவித்து அனுப்பும்படியும், அவர்களை சென்னையில் உள்ள சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டறை, உயர்நீதிமன்ற பாதுகாப்புப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு, சென்னைப்பாதுகாப்பு காவல் உள்ளிட்ட பணிகளில் இணைக்கப்படுவார்கள்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் உரிய முறையில் இணைத்து அறிக்கை அனுப்பும்படி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பணியமர்த்தப்படும் காவலர்கள் ஓராண்டுக்கு பணி மாறுதல் பெற முடியாது என காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT