Published : 02 Jan 2021 03:23 AM
Last Updated : 02 Jan 2021 03:23 AM
ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தையடுத்து, ரஜினிகாந்தின் வீட்டைச் சுற்றிபோலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினி அரசியல் கட்சிதொடங்கப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அண்மையில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றபோது அங்கு பணியாற்றிய ஊழியர்கள் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.
இதற்கிடையே ரத்த அழுத்தத்தில் சீரின்மை இருந்ததால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுசென்னை திரும்பினார் ரஜினி.இதையடுத்து உடல்நிலை காரணமாக, தான் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என அறிவித்தார். ரஜினியின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதை வெளிக்காட்டும் வகையில் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினி வீட்டு முன் திரண்டு, அறிவிப்பை திருப்பப் பெற வேண்டும், அரசியலுக்கு வர வேண்டும் என தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ரஜினி ரசிகரானமுருகேசன்(55) என்பவர் ரஜினி வீட்டின் முன்பு தீக்குளிக்க முயற்சித்தார்.
இதைக் கண்ட போலீஸார் ஓடிவந்து முருகேசனைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினி ரசிகர்கள், அவர் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என கூறி தொடர்ந்து போயஸ் இல்லம் முன்பு திரண்டு வருகின்றனர்.
இதையடுத்து ரஜினிகாந்த் வீட்டைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் யாரேனும் விபரீத முடிவில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக போலீஸார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். மேலும் சாதாரண உடையிலும் கண்காணித்து வரு கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment