Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 03:24 AM
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் ராப்பத்து 8-ம் திருநாளான நேற்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா டிச.14-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தற்போது நடைபெறும் ராப்பத்து 8-ம் திருநாளான நேற்று திருமங்கை மன்னன் வேடுபறிநிகழ்ச்சி நடைபெற்றது.
சோழப் பேரரசில் தளபதியாக இருந்து பின்னர் சிற்றரசனான திருமங்கை மன்னன், பெருமாள் மீது கொண்ட அதீத பக்தியால் ஸ்ரீரங்கம் கோயிலில் பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளார். அப்போது போதுமான நிதியில்லாமல் கவலையடைந்த திருமங்கை மன்னன், வழிப்பறியில் ஈடுபட்டு, அந்த பொருட்களைக் கொண்டு திருப்பணிகளை தொடர்ந்துள்ளார். இதை தடுத்து நிறுத்த பெருமாள் மாறுவேடத்தில் வந்தபோது, அவரிடமும் திருமங்கை மன்னன் வழிப்பறி செய்ய முயன்றுள்ளார்.
அப்போது, மன்னனை திருத்தஅவரது காதில் பெருமாள், ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை கூறினார். அதன்பின் வந்திருப்பது பெருமாள் என உணர்ந்த திருமங்கை மன்னன் திருந்தி, அவரது ஆசியோடு திருமங்கையாழ்வாராக மாறியதாக வரலாறு.இதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவில் திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நிகழாண்டும் இந்தவிழா கோலாகலமாக நடைபெற்றது. நம்பெருமாள் சந்தனு மண்டபத்திலிருந்து தங்கக் குதிரைவாகனத்தில் மாலை 5 மணிக்குப் புறப்பட்டு கோயில் மணல்வெளியில் வையாளி வகையறா கண்டருளி, வேடுபறி நிகழ்ச்சியில் பங்கேற்று இரவு 6.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தை சேர்ந்தார். அங்கு பக்தர்களுக்கு சேவை சாதித்து விட்டு, இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT