Published : 30 Oct 2015 03:29 PM
Last Updated : 30 Oct 2015 03:29 PM
மழை நேரத்தில் அரசு பஸ்கள் ஒழுகுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பருவமழை தீவிரமடையும் முன்பாக அனைத்து பஸ்களையும் ஆய்வு செய்து ஒழுகும் பஸ்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேள்விக்குறியாகும் தரம்
தமிழ்நாடு அரசு பஸ்களின் தரம் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதற்கு அண்மை காலமாக நடைபெறும் பல சம்பவங்கள் சாட்சியம் கூறி வருகின்றன. அண்ணையில் கேரளா சென்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்ஸில் திடீரென ஓட்டை விழுந்ததால் பெண் பயணி கீழே விழுந்து காயமடைந்தார்.
இந்த சம்பவம் வாட்ஸ்அப் மூலம் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போக்குவரத்துக் கழக அலுவலர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், திருநெல்வேலி கோட்டத்தில் உள்ள பஸ்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஒழுகும் பஸ்கள்
இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை அரசு பஸ்களின் தரத்தை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. பல அரசு பஸ்கள் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இயங்கும் பஸ்கள் மழை நேரத்தில் ஒழுகும் பரிதாப நிலையில் காணப்படுகின்றன.
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு எண்ட் டூ எண்ட் பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் கிளம்பிச் சென்றது. இந்த பஸ்சில் சுமார் 20 பயணிகள் இருந்தனர். வாகைகுளத்தை தாண்டி சென்றதும் மழை கொட்டத் தொடங்கியது.
பஸ்சின் மேற்கூரை ஆங்காங்கே உடைந்து ஓட்டை காணப்பட்டது. இதனால் மழைநீர் பஸ்சுக்குள் ஒழுகியது. பஸ்சுக்குள் மழை கொட்டியதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
பஸ்சில் போதுமான இருக்கைகள் இருந்தும் இருக்கைகளில் இருக்க முடியாத அளவுக்கு ஒழுகியது. இதனால் பயணிகள் எழுந்து மழைநீர் ஒழுகாத இடத்தில் ஒதுங்கி நின்று கொண்டு பயணித்தனர். இந்த ஒரு பஸ்சில் மட்டுமல்ல பெரும்பாலான பஸ்களின் நிலை இது தான். கிராமங்களுக்கு செல்லும் நகர பஸ்களின் நிலைமையோ படுமோசம் என்கின்றனர் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூறுகின்றனர்.
பஸ்சுக்குள் குடை
பஸ்சுக்கு உள்ளேயே மழை பெய்வதால் குடை பிடித்துக் கொண்டு தான் பெரும்பாலான பஸ்களில் பயணிக்க முடிகிறது. பல பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகளில் பொருத்தப்பட்டுள்ள ரப்பர் புஷ்கள் பராமரிப்பின்றி நகர்த்த முடியாமல் இருப்பதால் மழை பெய்யும் போது கண்ணாடிகளை மூட முடிவதில்லை.
இதனால் ஜன்னல் ஓரங்களில் அமர்ந்து பயணிக்கும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும், இருக்கைகளின் உறைகள் கிழிந்து காணப்படுவதால் மழைநீர் விழுந்து அவைகளில் நீண்ட நேரத்துக்கு அமர முடிவதில்லை என அரசு பஸ்களின் அவலங்களை பட்டியலிடுகின்றனர் பயணிகள்.
தரமற்ற பொருட்கள்
இது குறித்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூறும்போது, முன்பெல்லாம் பஸ் கூண்டு கட்டும் பணி ஓரளவு தரமாக இருக்கும். அதனால் பஸ்கள் சில ஆண்டுகளாவது தாக்குபிடிக்கும். ஆனால், தற்போது தரம் குறைந்த பொருட்களை கொண்டு கூண்டு கட்டுவதால் ஒரிரு மாதங்களிலேயே ஓட்டை விழுந்து ஒழுக தொடங்கி விடுகிறது.
முன்பெல்லாம் பஸ் ஒழுகுகிறது என பணிமனையில் தகவல் தெரிவித்தால் உடனடியாக அது சரி செய்யப்படும். ஆனால், இப்போது கண்டு கொள்வதே இல்லை. மேலும், பராமரிப்பு பணிகளை செய்ய போதுமான தொழில்நுட்ப பணியாளர்களும் இல்லை. ஆனால் பயணிகளிடம் வசவுகளை நாங்கள் தான் வாங்க வேண்டியிருக்கு என வருத்தமாக தெரிவித்தனர்.
சேவை குறைபாடு
இது குறித்து எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் திட்ட இயக்குநர் மீராசங்கர் கூறியதாவது, திருநெல்வேலி கோட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு பஸ்கள் மழை நேரத்தில் ஒழுகுவதாக புகார்கள் வந்துள்ளன.
மழை தீவிரமடைவதற்கு முன்பாக அனைத்து பணிமனைகளுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பி, பஸ்களை ஆய்வு செய்து, மோசமான நிலையில் உள்ள பஸ்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
அரசு பஸ்களில் மேற்கூரை ஓட்டை விழுந்து மழைநீர் ஒழுகுவது மிகப்பெரிய சேவை குறைபாடு ஆகும். இதற்கு எதிராக இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் பயணிகள் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடரலாம், என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT